Friday, November 29, 2013

ரயில்வே கேட் ஆயா..!!!

மறந்தே போச்சிஎன்று சொல்லும் எந்தவொரு மனிதனும் ஒருபோதும் மறப்பதேஇல்லை தங்கள் வாழ்வில், நினைவில் பதிந்து போன ஞாபகங்களை, மனிதர்களை.

அப்படி ஒருபோதும் மறக்க முடியாதஒருத்தியாக என் வாழ்வில் நிறைந்து போனவள்தான், இந்த “ரயில்வே கேட் ஆயா”.
யார் இந்த ஆயா..?இவருக்கும் எனக்கும் என்ன உறவு.
என் பால்யத்தின் நினைவுகளை,தன் அன்பால் தூக்கித் திரிந்தவள்.காலைகடனுக்கு கூட்டிச்செல்வது முதல் , மாலை ஊட்டி வருக்கி வாங்கித் தருவது வரை என் அருகிலேயே இருந்தவள்.எனது அழுகையை ஒரே ஒரு முத்தத்தால் நிறுத்தியவள்.தனது வெந்து போன சுண்ணாம்புவிரல்களால் எனக்கு மை பூசி அழகு பார்த்தவள்.எனது சமீபத்திய நினைவுகளில் அடிக்கடிசிரிப்பினை வீசுபவள்.எனக்காக பரிசளிக்க பித்தளை மோதிரத்தை அணிந்து வரும் இளைத்த நிழல்அவள். எனது தந்தையின் வழி தூரத்துச் சொந்தம் என்று அம்மா சொல்ல அவரை பற்றி அறிந்துகொண்டேன்.எனது அம்மாவின் வழி தாத்தா , பாட்டியும் ,அப்பாவின் வழி தாத்தா,ஆயாவும்
நான் பிறப்பதற்கு முன்பாகவே பிறவிப் பயன் அடைந்து விட்டார்கள்.எனக்கு விவரம்தெரிந்த நாள் முதல் எனக்கு ரயில்வே கேட் ஆயாவை மட்டும்தான் தெரியும்.என்னுடையகிராமத்தில் இருந்து ஐந்து கிராமங்கள் தள்ளி இருக்கும் பொன்னம்மாபேட்டை என்றகிராமத்திற்கும் , நகரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில , தனது 10*6 சதுரடி குடிசையில் வாழ்ந்துகொண்டிருப்பவள்.
எழுபது வயதை கடந்துவிட்ட ,எனது பால்ய நினைவுகளின் தேவதை அவள் .தொலைப்பேசியில்பேரன்களின் குரலை கேட்டுக் கொண்டிருக்கும் பாட்டிகளை விட,பேராண்டிகளின் ஆயினைதுடைத்துக் கொண்டிருக்கும் ஆயாக்களின் உலகம் பெரிது.அப்படிப்பட்ட ஆயாவாக என்உலகத்தில் நிறைந்து போனவள்.நான் விழித்துக் கொண்டிருக்கும் போது எனை பார்க்க வரும்ஆயா , நான் உறங்கிய பிறகுதான் தன் வீடு திரும்புவாள்.
வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து தரும் தொழில் செய்து வந்தவள். அத்தொழில்செய்வது எவ்வளவு கடினம் என்பதை அவரை பார்த்துதான் அறிந்து கொண்டேன்.சுண்ணாம்புத் துளிவிழுந்தே சிவந்து போன அவளின் கண்களில் வழிந்து கொண்டே இருந்த கண்ணீர் துளிகள்,இன்றும் ஒழுக்கிக் கொண்டேதான் இருக்கிறது என் நினைவுகளில். என் வாழ்வில் நான்விரும்பிய ஒரே ஒரு ஆயாவாக அவள் மட்டுமே இருந்தாள், இருக்கிறாள். ஒவ்வொரு முறை எனை காண வரும்போதெல்லாம் , நான் விரும்பும் இனிப்புபாக்கினை எனக்காக வாங்கி வந்தவள்.அவளது மடியிலேயே அமர்ந்து , சிரித்து , விளையாட ,தன்நீண்ட பெரும்மூச்சினை எனக்காக தந்தவள்.பட்டாம் பூச்சியாய் அவள் மேல் அமர்ந்துதட்டான் (தும்பி) பிடித்த நாட்கள்,எனை இன்றும் சிறுவனாகவே உணரச் செய்கிறது.ஒருபோதும் சாயம் இழக்காத வானவில்லாக தோன்றிக் கொண்டே இருக்கிறாள் ரயில்வே கேட் ஆயா.படங்களின்மேல் தீராத காதல் கொண்டவள்.எனை பார்க்க வரும்போதெல்லாம் ஆயிரம் திரைப் படங்களோடுவந்தவள்.
தன் கதையோடு , திரைக் கதைகளையும் சேர்த்து, இன்றும் ஓடிக் கொண்டே இருக்கிறாள் முடிவில்லாமல்.தான் முதன் முதலாக எம்.ஜி.ஆரை பார்த்ததை அடிக்கடி சொல்லி சொல்லி தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, மேலும் மேலும்எம்.ஜி.ஆரை சிவப்பாக்கியவள். .அன்று முதல் இன்று வரை வெளியாகும் அத்தனை படங்களையும்முதல் ஆளாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவள் .விசி தம்பி நல்லா ஆடுது , அசீதுதம்பி சுண்ணாம்பு மாதிரி வெள்ளையா இருக்கு ,இப்படி வர்ணித்து வர்ணித்து தனதுவாழ்வை திரைப்படங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவள்.அவருடன் சேர்ந்து ஒரு படம் கூடபார்க்கவில்லையே என்ற ஏக்கம் இன்றும் எனக்கு உண்டு.
மனிதன் திரையில் பார்க்காத படங்களை தன் வாழ்விலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறான்.ஒருபோதும் அத்திரை கிழிவதே இல்லை.


ஆயாவை கட்டிக் கொண்டு விளையாடும் போதெல்லாம்,அவருக்கு இருக்கும் காச நோய்எனக்கும் தொற்றிக் கொள்ள கூடாது என்பதற்காக , சாடையாக அவரை திட்டும் சொந்தங்களின்பேச்சால், தனக்கு விருப்பம் இல்லாமலேயே கண்ணீரோடு எனைவிட்டு விலகிச் சென்றவள்.
அட மானுடமே, அழிந்து போகும் மனிதர்களுக்குத்தான் காச நோய் , அன்பிற்கு ஒருபோதும்இல்லை.


வயது மாற்றத்தால், இட மாற்றத்தால்,கால மாற்றத்தால் , இப்படி பல்வேறு மாற்றங்களால் நம்முடைய நினைவுகள் தேய்ந்துபோகுமே தவிர, ஒரு போதும் அழிந்து போகாது.விவேக் என்ற என் பெயரை விவேக்கு என்றுஅவளால் மட்டுமே அழைத்திட முடிந்தது.அவளது வீட்டுக்கு அருகில் இருக்கும் “ரயில்வே கேட் கிராசிங்”( railway gate crossing)தான் இன்றளவும் அவளதுநினைவுகளை தனது தண்டவாளத்தோடு சேர்த்து கொண்டுள்ளது.


எனக்கு முனியம்மாவைஒருபோதும் தெரியாது. எப்பொழுதும் அவள் ரயில்வே கேட் ஆயா தான் எனக்கு. கடைசியாக ஆயாவை பார்த்து,இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. மீண்டும் பார்க்க சீக்கிரம் ஊருக்கு செல்வேன்.அதுவரை உனது முதுமை நினைவிலிருந்து எனை நீக்காமல் வைத்திருப்பாயாஆயா..?


ஒருபோதும் அமராத பறவையாக பறந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை.நீண்டநெடும்பயணத்தில் அது மனிதர்களை மட்டுமே விழுங்குகிறது,நினைவுகளை அல்ல.பறவையினுள்அடைபட்ட வானமாய் நம் நினைவுகள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.ஆயிரமாயிரம்முகங்கள் ,ஆயாவாக , தாத்தாவாக,வாட்ச் மேனாக ,டி கடை சிறுவனாக,ஸ்கூல்டீச்சராக,இறந்து போன நண்பனாக,பிரிந்து போன காதலியாக இப்படி யார் யாராகவோ நிறைந்துகொண்டே இருக்கிறார்கள் நம் வாழ்வில்.


ஒரு போதும் நிரம்பாத கோப்பையாக வாழ்க்கை இருக்கிறது.
நினைவுகளை பருகாத உயிராக மனிதன் இருக்கிறான்.

2 comments:

  1. அழகான உறவு அற்புதமான வார்த்தைகளில் நெகிழ்ந்து கூறியிருப்பது உஙகள் மிருதுவானஇதயத்தை பறைசாற்றுகிறது குறும்படம் இயக்கினால் என்ன இதை

    ReplyDelete
    Replies
    1. Thanks for your suggestion and comments. Sure will try someday .

      Delete