Tuesday, September 6, 2011

பேஞ்ச மழ காஞ்ச நேரம்...


அறுந்து போன வானவில்லில்
ஆகாயந்தான் தொங்குது  ..
அடமழ பேஞ்சதுல
வர்ணம் கொஞ்சம் மாறுது-
நேத்து பேஞ்ச மழையில
ஏதோ ஒன்னு மொளைக்குது - அது
காளான் இல்லன்னு தெரிஞ்சதும்
கனவு மொத்தம் கலையிது .
நேத்து சமஞ்ச பூவொன்னு
இன்னைக்கு கடையில விக்குது.
அத வித்த கடக்காரனுக்கு
நாரு மட்டும் மிஞ்சிது..
பூவ எடுத்து சூடயில
பொக்க வாய் சிரிக்குது -
அவ வயசு பேத்தி ஒன்னு
கல்லாட்டம் ஆடுது.
கறுப்பு சட்ட போட்டுகிட்டு
கூட்டம் ஒன்னு கத்துது -
வெத்தலைய இடிசிகிட்டு
கெழவி தலைய ஆட்டுது.
தக தக
சட சட
பட பட
எத்தன கிளவி இருக்குது .
அத்தனையும் சேர்த்து வச்சி - ஒரு
கிழவி பாடுது.
 
ஊரு முழுக்க கத்தி முடிக்க
ஒரு திண்ண கெடைச்சது -
ஒடம்ப சாய்க்கும் வேளையில
பூன ஒன்னு தடுக்குது .

Sunday, August 28, 2011

சேதி சொல்லுதாம் வாழ்க்க...?

மின்னல் வெட்டு - பிறகு
மின் வெட்டு ,
இறந்து போனது
மின்விசிறி மட்டும் அல்ல.

ஆகாயக்கடல் ,
மின்னல் துடுப்பு ,
நீந்திச்செல்லுது
என் அறை .

கைபேசி வெளிச்சம்
கை விரல்களின்  நிழல்
பிரம்மாண்டமாய் தோன்றுது பிம்பம்.

அரைத்தூக்கத்தில் வானமும் 
பாதி வெளிச்சத்தில் நானும்
கண்கள் கொண்டே விடிந்தது  உடல்.

மனிதன் விடும் மூச்சினில் - இன்று
மரங்கள் விடுகின்றன  மூச்சினை.
காலம் மாறிவிட்டதாமே..?

வாழைமரத்தின் நிழல்
தீமை நடப்பதற்க்கான
அறிகுறியாம் ..?

பாவம்!!

மூன்றாம் தளத்தில்
வசிக்கும் என் அறையில்
என் நிழல் மட்டுமே  உண்டு.
வாழை மரம் பிழைத்து விட்டது.



Sunday, August 7, 2011

முன்பொருகாலத்தில் ஒற்று(ப்)பிழை .......

முன்பொருகாலத்தில் தான் பார்த்த கனவு காட்சியினை
விவரிக்க தொடங்கினான் அந்த மனிதன்.
அது முற்றிலும் சிதைந்த ஒன்றாக இருந்ததென  அவன் கூறினான்.
மூச்சி முட்ட கவிதைகளை முன்பிரவு படித்ததாக சொன்னான்.
 எந்தவொரு விருப்பமும் இல்லாமல் அவன் சொல்வதை கேட்கலானேன்.
ஒரு பெண்ணை பற்றியும் விவரித்தான் .
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நண்பா  நேற்று
நீ சரியா தூங்கலையா..?
இப்படி அவனும் நானும் புரிந்தும் புரியாமலும் காலம் கடத்தினோம்.
சிறிது நேரத்திற்கு பின் காற்றினை உணவாக தந்தார்கள்  தேவதைகள்.
பட்ட மர நிழலாய் பரவி கிடந்தது அந்த வெறுமை.
நீண்ட வரிசைக்கு பிறகு உறங்குவதற்கான இடமும் அனுமதியும் கிடைத்தது.
சற்றே மௌனமாகி அந்த உருவத்தை பார்த்தேன்...
நான் என்றோ இழந்த அன்பினை என்னுடைய  இளம்வயதில் தந்த அதே"ரயில்வே கேட் ஆயா"..தான் அது .
திரும்பி பார்கையில் பிரம்போடு  மோகன் வாத்தியார்.
சற்று பயம் கலந்த மரியாதையுடன்
ஐயா நீங்க இங்க எப்படி ..?
இம்முறை அடிக்காமல் சிரித்துவிட்டு தன் இருக்கை நோக்கி நடந்தார்.
ஆயிரமாயிரம் முகங்கள் இதுபோல
பார்த்த பார்க்க நினைத்த எத்தனையோ முகங்கள்.
இன்னும் வரிசைகள் குறைந்தபாடில்லை.
எங்கள் படுக்கை நோக்கி நடந்தோம் ..
அதற்குள் நிரம்பிவிட்டதாக சொல்லி ..
மீண்டும் காத்திருக்க சொன்னார்கள்.
நீண்ட பயணத்திற்கு பிறகு - இன்றுதான்
நிம்மதியாக  உறங்கவிருக்கின்றோம்.

Wednesday, July 20, 2011

பெண் எனும் பேரண்டம்.


நீண்ட நெடு பயணத்தில்
வீழ்ந்து போகுது பெண்மையின் தனிமை.
அது அவளுக்கானதாய் ஒரு போதும் இல்லை.
பிறப்பில் தொடங்கிய பெண்மையை
பிணம் வரை பிறரே சுமக்கின்றனர்.
சதை கொண்ட பூவினை
நகம் கொண்டே கிழிகின்றோம்.
அவள் அவளாகவே இல்லை.
குழந்தை
குமரி
காதலி
மனைவி
யாவரும் நலமா இங்கு...?
உறவினை அறுத்து எறிய..
கொச்சையாய் பேச
அவளுக்கும் உண்டு
ஆயிரம் ஆயிரம்..
நீண்ட நெடு பயணத்தில்
அழிந்து  போகுது பெண்மையின்  உலகம்.
வர்ணித்த வார்த்தைகளுக்கெல்லாம்
வயதாகி அழிந்து விட்டது - இனி
அவள் அவளாக மட்டுமே இருப்பாள்.
இனி தன்  கற்பதினில் - தனது
கனவினை மட்டுமே சுமப்பாள்.

Tuesday, July 19, 2011

கூட வா நிழலே ..

கூட வந்த நிழலே ..
கூட வந்த நிழலே ..
கூடலையே நாம இன்னும் ..
வெளிச்சம் வர   கூட வந்து   வெக்கையில நடக்க விட்ட ...
காட்டிருட்டு கண்டதும் எங்க போய் நீ ஒளிஞ்ச..
கண்மூடி நான் கிடக்க கனவுலையும் நீ இல்ல ..
பாரமுன்னு நீ  நெனைச்சா ராத்திரியில பதுங்கிகிட்ட ...
கலரு சட்ட போட்ட நானும் கறுப்பாத்தான் இருக்கேன் ..
உடம்பே    மீசையாகி நீண்டுகிட்டே போறேன் ...
களவாணி பயபுள்ள கண்மூடி கெடக்குற..
காதலி இல்லைன்னா  நிலத்துல விழுகுற ..
என் உசுரே கறுப்பாகி ஜோடி போட்டு வருது..
12   மணி ஆனதும் பாதத்த நக்குது..
கூட வா நிழலே ..
கூட வா ...
கூத்தடிக்க கூட வா.

Wednesday, July 13, 2011

நிர்வாண சட்டை …


ஆடையணிந்தும் நிர்வாணமாய்
என்
  வீட்டுப்பனித்துளி.
வசிக்க இடம் தேடிய

நாளிலெல்லாம் மறந்தே போனேன் - நான்

எப்போதோ வசித்த இவ்வீட்டினை.

ஒரு முறை கூட - இப்படி

வாழ இயலவில்லை என்னால்.

சுவர்கள் இல்லை
,
உணவு இல்லை
,
கழிவறை இல்லை
.
சிறிது நேரம் வசித்த பின்

நானும் நிறைந்து நிர்வாணமானேன்.

உட்சென்று உயிர் தீண்டி

நனைந்து விட்டது - என்
 
நாணமும்  ஞானமும்.
பிஞ்சுக்குழந்தையின்

கருப்பை போன்று அத்தனை

தூய்மை அப்பனித்துளி.

சாயம் போகாத சலவை செய்யாத

சரும பயிர் வெளி.

நாம் முகம் பார்க்கலாம்.

சிரிக்கலாம்
,
ஒரு முறை வசித்துவிட்டு திரும்பலாம்.

உட்சென்றபடி சூரியனை முத்தமிடலாம்.

இனி -

ஆடையணிந்தும் நிர்வாணமாய் - நானும்

என்
  வீட்டுப்பனித்துளியும்

Friday, July 8, 2011

ஞானக்கூத்து

அழிந்து கொண்டிருக்குது  வார்த்தை
ஒவ்வொரு எழுத்தின் அழிவிலும்
மீதுமுள்ளது  வாசிக்க இயலாத பொருள்.
யாவும் அழிந்த பின்னும்
நிறைந்து கிடக்குது  ஞானத்தாள்.

Sunday, June 12, 2011

வெற்றிடம் ..

எந்த வெற்றிடமும் ஏதோ ஒன்றை சுமந்துகொண்டிருக்கும்.
நம் உயிரினை சுமக்கும் ஏதோ ஒன்றினை போல ..
நிரப்பப்பட்ட வெற்றிடம் - அங்கு
அத்தனையும் காலாவதியானது .
மீண்டும் பயன்படாது .
காலம் சென்ற பின் கடவுள் மன்னிப்பு தருவார்.
அவர் மிகவும் நல்லவர்.
நாம் எந்த பாவமும் செய்யலாம்.
அவர் என்ன செய்வார் - பாவம்
வெறும் கடவுள் தானே ..???
இறபதற்கு முன் ஒரே ஒரு முறை
அழுதுவிடுவோம் .
அது போதும் நம் பாவத்திற்கு - ஏனென்றால்
நாமும் கடவுள் தானே - பாவம்
மனிதர்கள் என்ன செய்வார்கள்.
இனி நாமும் மன்னிப்பு தரலாம்.
எந்தவொரு பாவத்தினையும்
ஏற்றுக்கொள்ளலாம்.
இது வெற்றிடம் - இங்கு
எதுவுமே இல்லை.
ஏதோ ஒன்றினை தவிர - மீண்டும்
அத்தனையும் காலவதியாகும் - ஆனால்
இனி அத்தனையும் பயன்படுத்தப்படும்.




நெடுஞ்சாலை புத்தன் ...

நடக்கப்பழகிய காலம் முதல் - இன்று
நடந்துகொண்டிருக்கும்  காலம் வரை ..
அந்த மனிதனை கடக்காமல் - எந்த
சாலையும் முடிவுற்றதில்லை .
எந்த பேதமுமின்றி  ஒரே  சிரிப்பு
அனைவரிடத்திலும் ..
மயிர்களுக்கிடையே சுருங்கிப்போயிற்று
அவனது முகம் .
அது அவனது அடையாளம் .
வறுமை சிரிப்பும்
தூய்மையற்ற  சுவாசமும்
அவனை இயக்குகிறது .
உலக பொருளாதாரமும்  , தனி மனித சோறும்
அவனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அவன் ஒரு நெடுஞ்சாலை புத்தன்.
எந்த மரமும் அவனுக்கு தேவையில்லை.
பலரது ஞானம் அவனது மௌனத்தில் அடங்கிவிட்டது.
அவனது மரணம் பலரது பாவத்தால் முடிந்துவிட்டது.
நம்முடைய மரணம் அவனது சாலையை கடந்துபோகின்றது.

Saturday, June 11, 2011

முடிவுற்ற முழுமை.

தன் நிழலுக்கு உயிர் தந்து
பறக்கவிட்டது  பறவை.
நிஜம் கண்ட பொழுது
அதுவும் நிழலாகி போனது .

Monday, June 6, 2011

அந்தரத்தில் மிதக்கும் ஆகாயம் ,....

அந்தி தேய்ந்து இருளப்பி பொருள் கொண்டது இரவு..
இருள் நிழல் தேட   தவம் கொண்டது ஒளி..
விடிந்துவிட்டதாய் எண்ணியவை - இன்னும்
விடியவில்லை..
கடந்துபோன இருளிற்கு உயிர் வந்தது
அதன் நிழலில்..
இருள் பூசி ஒளிருது வானம்.
அதன் நிறம் கண்டு வெடித்தது மோகம்.
அந்தரத்தில் மிதக்குது ஆகாயம்.
அதை தீண்ட நீளுது நீட்சி .
மின்னலாய் வளையுது புருவம் .
கண்கள்   கொண்டு  விடியுது  உடல்.
ஆழ்நிலை தியானம் கொள்ளுது ஆன்மா.
அதன் பொருளற்ற  மேன்மை இருளாய் படர்ந்தது.
வீழ்ந்துகொண்டே இருக்குது  இரவு
தொலைந்து போன குழந்தையாய் அழுகிறது  இருள்.
கைவீசி அழைக்குது  அந்தி வானம்
கைவிலகி சென்றது மர்ம ஒளி - இங்கு
விடிந்துவிட்டதாய் எண்ணியவை இன்னும்
விடியவில்லை - அது
அந்தரத்தில் மிதக்குது ஆகாயமாய் .



Friday, May 27, 2011

காதலி பெண்ணே ...

உன் முத்தம் தந்த ஈரம் .
நீ அழுத போது நான் சிரித்தது .
நான் அழ நீயும் அழுதது.
அன்றிரவு நடந்த யாகம்.
உனை கண்டு காகமும் கலவி கொண்டது .
பேய் பிசாசு எல்லாம் திருமணம் முடித்துவிட்டது.
அப்பனும் அம்மையும் மறந்து போனார்கள்.
தம்பி தந்த 5 ருபாய் மட்டும் உன் கையில்.
நண்பர்கள் தந்த 1000 ருபாய் மட்டும் என் இருப்பில்.
கசங்கிய ஆடைகள் திருமண உடையான அந்த நாள்.
ஆசை  மடிப்புகள் முழுதும் தேய்ந்து போன நம் இரவுகள்
வறுமை காதலும் வயதாகாமல் நிலைத்துவிட்டது.
இப்படி அத்தனை நேரமும் - நம் 
காலமும் கடந்துவிட்டது .
இன்று நீ இறந்து விட்டாய் ..
எங்கேயோ  போய் விட்டாய் ..
நமக்கு மகன் பிறந்து விட்டான்..
அவன் உனை கண்டு சிரிக்கின்றான் ..
நான் பரிதாபப்படுகின்றேன் .
நான் இன்று அழுகின்றேன்  - நம் மகனும் 
அழுகின்றான்.
அலைய தொடங்கிவிட்டேன் மீண்டும் ஒரு
இழப்பை தவிர்க்க ...
பழகிவிட்டேன் வெறும் பனியாய் மறைய ..
இப்படி பல பழகிவிட்டது.
தேடிக்கொண்டே இருக்கின்றேன் ..
 நம் வாசத்தை...
வர்ணகளற்ற அந்த வானவில்லினை..
கடந்து கொண்டே இருகின்றது எனதான உன் காலம்.
அது முடியும் பொழுதும் மீதமிருக்கும்
நீ தந்த ஈரமும்...
நமக்கான நம் நினைவுகளும்...

Tuesday, May 24, 2011

மரண வேதம் ...

எனது மூளை அழுகிவிட்டது.
அது  பிணவாடையென - என்
சுவாசத்தில்  நுழைகிறது.
என் சுவாசத்தை  கரையான்கள்
கடந்து செல்கின்றன.
அதன் நேர்கோட்டில்
அத்தனையும் அரிக்கப்படுகின்றன.
என்றோ நிகழ்ந்த தப்பிற்கு - இன்று
அனைவரும்  பழிதீர்கின்றனர்.
நான் சற்று மனநிறைவோடு
மரித்துப்போகின்றேன்.
உண்மையில் எனக்கான
தருணம் வந்துவிட்டது .
இன்று அனைவரிடத்திலும்
மண்டியிடுகின்றேன் .
ஒரே  ஒரு முறை
எனக்காக  யாரேனும்
அழமுடியுமா ..?
எனது கல்லறையில்
உங்கள் பெயர்கள்  இடம்பெறாது ....
யாரேனும் ஒரே ஒரு முறை
எனக்காக அழமுடியுமா ..??
நிச்சயம் அடுத்த நொடியில்
மனநோயாளியாக பிறப்பேன்.
பேதங்களற்று போகும் - எனது
ஞானம் ..
மலமும் மூத்திரமும் ஒருசேர
என்னுடன் தூங்கும் ..
எனது வார்த்தைகள் பொருளற்று போகும் ..
எனது  ஆண்மை நிறமின்றி வெளியேறும்..
இப்படி எதுவுமின்றி போவேன் நான்.
தயவு செய்து  யாரும் இப்பொழுது
அழவேண்டாம்...
இனி அழவேண்டியது
நான் மட்டுமே..

Thursday, April 14, 2011

பொய். உண்மை. கலாச்சாரம் ....?


அன்று நீரில் விழுந்த இலையின்
மௌன சலனத்தை உணர்வதற்குள் -
மீண்டும் ஒரு இலை விழுந்துவிட்டது .
அது பேரிடியென ..
இலையின் புணர்வென ..
என்னுள் இறங்கிவிட்டது .
எனது அண்டத்தை அசைய வைத்த ஆரவாரம்  அது .
காற்றோடு கலந்து விட்ட மாயமென
கரைந்து  போனது எனது ஆண்மை ..
புணர்வதற்கு இனி ஏதுமில்லை .
சூத்திரம் பயில இனி அந்த இலையும் இல்லை .
அது இலையாகவும் இல்லை இப்பொழுது .
கடுவுளின்  சயனமானது
அந்த இலையோடு முடிந்துவிட்டது .
இனி அவரும் கைகளையே துணை கொள்வார்.
அது தவறில்லை அவர் பிறந்த உண்மை
அவர் அறியாமல் இருபது தவறே ஆகும் .
தீண்டப்படும் விரல்களில் மறைந்திருக்கும்
காரணம் போல - அந்த
இலை மறைந்த காரணமும்
ஏதோ ஒரு முழுமையே ஆகும் .
அது கடவுளும் சாத்தானும்
கொண்ட உறவே ஆகும் .
ஏற்றுக்கொள்ளப்பட்ட  அல்லது
நிராகரிக்கப்பட்ட - அத்தனை
உறவிலும்  மறைந்துள்ளது
பல பொய்களும் ..
சில உண்மைகளும் ..
எவனோ கிறுக்கிய கலாச்சாரமும் ..

 

 

Tuesday, February 22, 2011

மரணவீதி !!!


ஒரு குழந்தையை  முத்தமிடுவதன் மூலம்
எனது மனச்சுமை சிறிது குறையலாம்..
?

அதற்க்கான தருணம் இன்றுவரை

வாய்க்கவில்லை..


அது நிகழும் என்றும்

நம்பிக்கை
  இல்லை..

நான் வளர்ந்துவிட்டதாகவே -
இந்த
சமூகம் சொல்கிறது ..


உனக்கு அறிவில்லையா - என்று

எவரேனும் கேட்டு விட்டால் ..
?

முத்தமிடுவதற்கு
  அறிவு
தேவையில்லை
  என்பதை
எப்படி நான்
உணர்த்துவேன்..?..

ஏதோ ஒரு உதடோ ..? - இல்லை
ஆண்மையோ ..? பெண்மையோ ..?
எது தேவை ..?
எனக்கு இவையெல்லாம் இல்லை .
முத்தமிட ஏதோ ஒரு காரணம் போதும்.
அது  மரண வீதியின் கடைசி
விருப்பமாகவும்  இருக்கலாம்.
இன்று தொடங்கும்  வாழ்கைக்காக..!
அன்றே முடிந்துவிட்ட
  அமைதிக்காக..!
மீண்டும் குழந்தையென
  அம்மாவிடம்  அடம்பிடிக்க ..!
இப்படி அவரவர் விருப்பம்

எதுவாகவும் இருக்கலாம் ..

நீங்கள் மரண வீதியில்
  பயணிக்க உள்ளீர்கள் ..
அது நீங்கள் விரும்பும்
  முத்தத்தை - உங்களுக்கு
கொடுக்காமலும்
  உங்களிடம் பெறாமலும் போகலாம்..!
இன்று முடிவதற்குள் ஒரே ஒரு

காரணத்தை
  தேடிச்செல்லுங்கள் ..
அது மரணவீதியில் உங்களின்
  கடைசி
முத்தமாகவும் இருக்கலாம்.

இல்லை -
உங்கள் மரணத்தை
எவரேனும் முத்தமிடலாம் .

எது நிகழ்ந்தாலும் - அது

பிறவிப்பயனே ..!!!

 


Wednesday, February 16, 2011

அன்பிற்க்கும் உண்டோ...?

இங்கே காதலெனப்படுவது ...?
மரணமோ ..?- இல்லை
மனப்பிறழ்வோ...?
அன்று முளை விட்ட  மோகமோ ..?
இன்றைய அயல்நாட்டு  ஆர்வமோ.. ?
ஏதேனும் ஒன்று காதல் எனப்படும்.
அது சாலையோர  நட்பாகலாம் .
நடுநிசி நாடகம்  எனலாம் .
நான் நீயென சொல்லலாம் .
நீ இல்லை வாழ்வில்லை  எனலாம்.
என் வருவாய் போதுமெனப்படலாம்.
எனது தனிமை  பிடிக்காமல் போகலாம்.
உடல் தீண்டவே ஆர்வம் - இருந்தும்
உண்மை காதலென பேசப்பிடிக்கலாம் .
எனது கனவுலகம் கசப்பாகிப்போகலாம் .
உனது யோகத்தில் நான் பொருந்தாமல் போகலாம்.
அன்று செய்தது தவறு என்று பேசலாம்.
நான் சரியா என்றும் யோசிக்கலாம் .
எவரேனும் உனை நேசிக்கலாம் .
அதில்  யாரென முடிவு செய்யலாம்.
ஏதேனும் ஒன்று  நிச்சயம் நிகழ்ந்தாகவேண்டும்.
அது உன் குழந்தைக்கு என் பெயராகவோ ..? - இல்லை
என் திருமணத்திற்க்கு உனை அழைப்பதாகவோ ..?
எது நிகழுமோ.. ? நிகழாதோ.. ? -ஆனால்
முற்றும் முடிந்திருக்கலாம் .. ?
ஏதேனும் ஒன்று நிகழும் வரை ..

Tuesday, February 15, 2011

உயிர் மழை ..

விரட்டியடிக்கப்பட்ட  நாயென - என்
வீடு தேடி வந்தது நன்றியுள்ள மழை...

எரியும் பிணமென 
விறைத்து விழுந்தது என் மனதில் ..

எத்தனை முறை வீழ்ந்த  பின்னும் - இன்னும்
அரசனாகவே  என் மழை ..

உனை முழுதாய் முத்தமிட
எண்ணிய நாளில் நான் சிறுவனாக இருந்தேன் ..

இன்றும் நீ அதே மழையாக இருகின்றாய் - நான்
அதே சிறுவனாக  இல்லை ..

ஆடை களைந்து உனை சூடிக்கொள்ளவே விருப்பம் - ஆனால்
சட்டையனியவே சாபம் பெற்றேன்...

என்றேனும் ஒரு நாள் என்னுள்  உயிரென
உயிரணுவாவாய் -அன்று
யாரோடு புணர்ந்து உனை மீண்டும்
புனிதமென  ஜனிக்கச்செய்வேன்..

நிச்சயம் மனிதரோடு அல்ல .
கடவுளோடும் அல்ல .
வழியேதும் இல்லையெனில்
நானே  உனதாவேன் .
அன்று நான் மனிதனாக இருக்கமாட்டேன் .

பிறக்காத உயிரணு நாம் ..
இறந்தபின்  அமைதியும் நாம் ..
இப்படி யாதுமாகி நாம் ..

ஒரேயொரு  அச்சம்  மட்டுமே எனக்கு ....?

மானிடரே  மழையோடு நான்  கொண்ட
உறவை கள்ளத்தொடர்பென பேசாதீர் ...

Saturday, February 12, 2011

எதற்காக அவள் ?

அவளைச்சுற்றி எப்பொழுதும் மீசைகளின் ஆரவாரம்
கறைபடிந்த பற்களுடன்  சாராய நெடியுடன்
அர்த்தம்கொண்ட சிரிப்புடன் வீரியம் கொண்ட பார்வையுடன்
என்றேனும் நிகழ்ந்து விடும் என்ற ஆசையில்
ஏதேனும் நிகழாதா என்ற தவிப்பில் ...
இப்படி அவளைச்சுற்றி எப்பொழுதும் ஆரவாரம் -
அவள் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை
தன்னருகே வீழ்ந்திருக்கும் வயோதிகனுக்கு
தேநீர் தராமல் அவள் இருந்ததே  இல்லை -
அவன் உணர்சிகள் இல்லாதவன் என்றே தோன்றியது .
ஒரு வேளை அவளின் உணர்ச்சிகள் மடிந்திருக்கலாம் .
கர்பப்பை  இல்லாமல் இருக்கலாம் ;
இல்லை பிறப்புறுப்பில்  எந்த தேவ...  மகனோ வெடி வைத்திருக்கலாம் .
கம்பி வேலியில் தனது அண்டம் அடைபட்டிருக்கலாம்,
எதுவேண்டுமானாலும் இங்கு நிகழும் ...
எத்தனை முறை அவர்களால் பிணத்துடன்  புணர முடியும் ..
அவள் அப்படித்தான் தன்னை உணர்ந்தாள் .
இருபினும் எதற்காக அவள் காத்திருக்கிறாள் ?
நமக்கு செய்திகள் மூலமாகவே அவை வந்து சேரும் .....
வேறென்ன செய்துவிட முடியும் அவளால் ?
நிச்சயம் என்றாவது ஒரு  நாள் நமக்கு சேதி வரும்...
அன்று தயவு செய்து எந்த ஆண்மகனும்
அவளது  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதீர் ....






Friday, February 11, 2011

காதல் எனும் உரையாடல்


ப்ரியமே ..?
ம்ம்ம்ம்ம்ம்ம்..?
இந்த உலகத்திலேயே நீதான் பேரழகின்னு
நான் எப்பயாவது சொல்லி இருக்கேனா ?
ம்ம்ம்ம் நிறைய தடவ .
அப்படியா ?
ஆமா .ஏன் இப்ப இந்த சந்தேகம்?
ஒன்னும் இல்ல .
சொல்லு ?
ம்ம்ம்ம் நான் அப்பா குடிச்சி இருந்தனா ?
எனக்கு நினைவில்ல ?
நினைவு இல்லாம போகும் ?ஆனா
வாடை அடிசுருக்குமே ?
ம்ம்ம்ம்ம்ம் எனக்கு வியர்வை நாற்றம் தான்
அடிச்சது ?
அப்டீனா அப்போ நாம செக்ஸ் வட்சிகிட்டமா ?
செக்ஸ் இருந்தாதான் வேர்வ வரும்னு எந்த
பெரும் ஞானி சொன்னது உனக்கு ?
இல்ல ...ஒரு சந்தேகம் ?
எனக்கு சந்தேகம் தீர்ந்து போச்சி ?
என்ன ?
சத்தியமா அப்போ நீ குடிச்சி தான் இருந்த .
கல்யாணத்துக்கு முன்னாடி தப்பில்லையா?
எது ?
வட்சிகிட்டா ?
கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வே தப்புதான் .
அப்போ நான் யாரு?
நீ ஒரு கோடி ஹார்மோன் , நான் பலகோடி சங்க இலக்கியம் ?
எனக்கு புரியல ?
லைப்ரரில புக் எடுத்து தர  உன்ன லவ் பண்ணா
உனக்கு எப்படி புரியும் ?
என்ன அசிங்கபடுதிரியா ?
நான் முட்டாளா?
காதல்ல  முட்டாள் தனம் தான் நல்லா  இருக்கும் .
அப்போ எனக்கு எதுக்கு சங்க இலக்கியம் தேவ ?
நான்  அப்படி சொல்லல ?
அப்போ ஏன்  ஏன் கூட பழகுற ?
ஏன்னா .....?
என்ன  பேரழகின்னு நீ மட்டும் தான்
கூப்பிட முடியும் .அதுக்காகதான் ..
போதுமா என் செல்லமே ?
cut cut cut...
madam இந்த இடத்துல ரென்னு dialogue விட்டுடீங்க ?
அவன் ஏன்னு கேட்ட பிறகு
நீங்க எனக்கு பசலை நோய்னா ?என்னனு
தெரியனும் அதுக்காகதான்  love னு நீங்க
சொல்லனும் மேடம் ?
ok ok ok sir
FIRST டைம் பெர்பெக்ட் தமிழு பேசுது  இல்லையா
அதான் கொஞ்சும்  பயந்துட்டேன்
டபிங்க்லே  சரியாய் பேசுற பொண்ணா ?
போடுங்கோ சார் ?
இந்த DIALOGUE MEANING மட்டும் கரெக்டா
சொல்லிடீன்கன  நான்  MISTAKE பண்ணது?சார்
ஓகே ஓகே ஓகே
One More ...
Camera : Rolling
Action.....
ப்ரியமே ?
ம்ம்ம்ம் ?







 


Wednesday, February 9, 2011

ஏதேனும் நிகழ்ந்தால் நன்று

ஆழ்ந்த உறக்கத்தில் நிர்வாண ஞானத்தை
உணரும்   பொழுது அடி வயிற்றை கடித்திடும்
கொசுவினை வன்கொலை செய்திட -

சாராய நெடியும் காமமும் கொண்ட
கவிதைகளை இடைகால தடை செய்திட -

சிறுகதை வாசிக்கும் வேளையில் சிறுநீர்
வருவதை தடுத்திட -

மலம் கழிக்கும் முன் - தேநீர்
பருகுவதை  நிறுத்திட -

அப்பாவின் சிகரெட்டை  தினமும்
திருடுவதை  மாற்றிட -

அம்மாவின் அழுகைக்காக ஏதேனும்
 ஒரு வேலைக்கு செல்வதை  மறந்திட -

தங்கை என்று  அறிமுகம் செய்யும் நண்பனிடம்
ஏதேனும் உளறாமல் இருந்திட -

நான் காற்று வெளி  அற்பம்  நிலையானவன்
தீபம் இருள் என்று பிதற்றுவதை  சகித்திட -

ஒருமுறையேனும்  தவறுக்காக  அழுதிட -

வீழ்ந்த பின்னும் வாழ்வதற்கு - ஒரு
வழியேனும் தோன்றிட

இதை எழுத்தும் வேளையில் எவரேனும்
படிக்காமல் இருந்திட -

ஏதேனும் நிகழ்ந்தால்- நன்று
என்  ஆவியே !
என் அண்டமே !

Monday, February 7, 2011

என் செய்தால் தீரும் ?

என்ன செய்ய இயலும் -சாலையோர
சக நண்பனை பார்க்கையில்,
உலகமயமாக்கலை  எண்ணி -ஒரு கவிதை
எழுத இயலும் -வேறென்ன
புடிங்கிவிட முடியும் என்னால் ?
அவனருகே அமர யோசிக்கும்
அற்ப மானிடர் தானே நாம் .
எவனோ விதைக்கின்றான் விதையை
எவனோ அமர்கின்றான் நிழலில்..
தனியொரு மனிதனுக்கு உணவில்லை ..
இன்றுவரை இந்த ஜகத்தை அழிக்க முடியவில்லை
ஏன் பாரதி கவிதையோடு அன்றே மறைந்து போனாய்?
எதை சொல்லி இந்த வலிகளை முடிவு செய்வேன் ?
மனநோயாளியாக இருந்தால்
இவ்வலி குறையுமா ?
நிறைய உண்டு மீதம்  -எதை சொல்லி
இங்கு முடிப்பேன் ?
மண்டியிட்டு  கேட்கின்றேன்
மரணமே !!
எனை தழுவிச்செல்..