Tuesday, December 28, 2010

என் செய்வேன்!!

எள்ளி நகையாடி  இன்பமதை அடைவேனோ!
இலை நகரும் திசை ஓடி காற்றைப்பிடிப்பேனோ!

மன மேனி நிறம்
  காண வாழ்வைத்தொலைப்பேனோ!
இல்லை - யோனியதை
யோகமென  அலைவேனோ!
அண்டம் பேரண்டமென தேடலைத்தொடர்வேனோ!

பறவையின் நிழலை
  பாற்க்கடலில் பார்ப்பேனோ!
மோக முட்களை
 இறுதிவரை பெறுவேனோ!
வள்ளுவன் குறிதனில் எதைச்சுமந்தானோ
-அதை
முழுதாய் பெற தினமும் புணர்வேனோ!

ஆணென பெண்னென பேதம் பார்ப்பேனோ!

அந்த ஆண்டாள்
  செய்ததை நானும் செய்வேனோ!
உலகை இகழ்ந்திட ஒரு சொல் தேடேனோ!

அது நானென உணர்ந்தபின்
  உண்மை அறிவேனோ!
நான் நானாக இருப்பதை அறுத்து எறிவேனோ!

முற்றும் முடிந்த பின்
  முழுதாய் நிலைப்பேனோ!
என் செய்வேன் மனமே - நினை
  என் வசம் வைக்க
மரித்துக்கொண்டிருக்கும் என்
மரணத்தை மௌனமாக்க!?
என்செய்வேன்  - இனி
என்செய்வேன்!!

Saturday, December 25, 2010

உண்டு உண்டு


அச்சமும் உண்டு ; விருப்பமும் உண்டு  ;
நிறுதற்குறியினுள் அடங்க மறுக்கும் வாசகமாய் !?
முடிவற்ற - எழுத்தாளனாய் இருப்பதில் ...
சமகால சமூகம் சுடுகாடாகும் ,
எதிர்படும் முகங்களை ஏளனமாக்கும் ,
புன்னகையை உரித்துப்பார்க்க தோன்றும் ,
ஈன்றோர்  எதிரிஎனப்படுவர் ,
உடன்பிறந்தோர்  இழிவெனப்படுவர்,
அவர்தம் சோற்றுக்காக யாரோ உழைப்பர்,
பிறர்நோக  தினமும் குடிப்பர்,
அடுத்தவரை தூற்ற ஆயிரம்  சொற்கள் ,
தம்  பெயருக்கோ சில எழுத்துக்கள் ,
சங்கம் முதல் சமகாலம் வரை ஞானம் ,
அதீத ஞானமென  பிறர் வாட பேசும் ,
ஒரு படி  அரிசி விலை தெரியாமல் போகலாம் ,
கம்பனை கடவுள் என்று போற்றலாம் ,
தான்  கடவுள் என்றும் தோன்றலாம் ,
இவர்தம் நேர்வழி சாலை வளைந்தும் போகலாம் ,
வளைந்த பாதையை நேரென்றும் வாதிடலாம் ,
வீதியை வீடென  சொல்வர் ,
யாருக்கோ வாழ்வதாய் என
எவருக்கும் வாழார் ,
எதிர்காலமென எதையும்  எழுதுவர்  ,
வாழும் நொடி வாழார் ;
வீழ்ந்த பின்பு  வாழ்வார்  சிலசமயங்களில்  ,
சுடர் அணையும் வேளையில்
சுய சரிதம்  படைப்பர் ,
இதை போற்றி யாவரும் மெச்சுவர்,
அவர்தம் பிணத்திற்கு   அவரே வெட்டியான்
அவர்தம்  கல்லறைக்கு அவரே வாசகம் ,
தோற்றம் மறைவென வரலாறு அச்சிடும் ,
கருத்தரங்கம் வைத்து இவர்தம் புகழ் பாடும் ..
சமூக சோற்றினில் சிறந்த பருக்கை ஆவார் .
அடுத்த களத்தினில் மெச்சும் விதை ஆவார்.
இருபினும்
தீதும் நன்றும் பிறர் தர வருமோ ?
இனி முடிவிலா...
அச்சமும் உண்டு ; விருப்பமும் உண்டு  ;

Friday, December 24, 2010

அங்கே யாவரும் நலமா ?

அங்கே நிறங்கள் பேதமில்லை ;
மதங்கள் மண்டியிட்டே தீரும் ;
சிலசமயம் நிற்கவும் செய்யும் ; 
பல முறை காத்திருக்கவும் செய்யும் ;
சாதிகள் சதை நோக்கி நகரும் ; 
சப்தமே மொழியாகும் ;
நிறைய கலபினம் ஐக்கியமாகும் ;
வெண்மை ஒன்றே
நிறமெனப்படும் ;
இருள் அங்கே கேள்வி ஆகும் ;
அடிமனம் கையடக்கமாகும் ;
இலக்கணம் சங்கத்தை எதிர்க்கும் ;
இலக்கியம் மீண்டுமொருமுறை  இயற்றப்படும் ;
கால அளவு கைப்பையினில்  வேறுரு
பெறும் ;
நேருக்கு நேர் விழி பாரா;
அங்கே அதற்கு அவசியமும் நேரா ;
முடியும் வரை முகவரி இல்லை ;
முடிந்த பின்பு
அங்கு  இடங்களே இல்லை ;
எதிரெதிர் இயக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் ;
ஓய்வு என்பதே வேலை ஆகும் ;
வேலை என்பதே இயக்கம் ஆகும் ;
பாலின பாகுபாடும்  சிலசமயங்களில் இல்லை ;
எதுவானதும் அதுவே ஆகும் ;
பேரழகிற்கும் பஞ்சம் இல்லை ;
அங்கு விழிகளும் இல்லை ;
நிறைய உண்டு இதுபோல -அங்கே
இயங்கிக்கொண்டிருக்கும்
மர்மங்களில் ....

Saturday, December 11, 2010

நான்..

நான் அர்த்தமற்றவன்,
என்னுள் இருக்கும் -
  எதை
இழந்ததால் இப்பெயர் எனக்கு ,
எனை முத்தமிட்டால்
கோபித்துக்கொள்வேன் ,
வசை பாடினால்
வயிறு குலுங்க சிரிப்பேன் ,
இங்கே முத்தங்கள் -எதற்காக
அர்த்தமாகிவிட்டது ?
அனாவசிய எச்சத்தை -என்
சருமம்  ஏற்பதில்லை ,
எனை நோக்கி- எறியப்படும் 
வார்த்தைகளில் பொருள் உண்டு ,
ஏனெனில் -நான் அர்த்தமற்றவன்.
ஆறடி உருவம்
கறுத்த மயிர்களுக்கிடையே
சிவந்த தோலினம்,
நான் கர்வம் கொண்டவன் போல்
தோன்றலாம் ,
ஆனால் -நான் அர்த்தமற்றவன்.
அந்தரத்தில் நின்றுவிட்ட மழைத்துளி
வசை மொழி தூவுகிறது ,
நான் நியூட்டன் இல்லை ,
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ,
நான் அர்த்தமற்றவன்.
அர்த்தமற்றவனாய்  இருப்பதில்
அத்தனை சுகம் ,
எதனை நோக்கியும் -எனது
பயணம் இல்லை ,
எனது பயணத்திலும்
வழிகள் இல்லை ,
நான் அர்த்தமற்றவன்.
நான் மனிதன் .




Saturday, December 4, 2010

இருள்..

குறைந்த  ஒளி..
நிறைந்த  மௌனம் ..
அறிவெனும் சுடர் ..

அவிழும் ஞானம் ..
ஞானத்தின் நிர்வாணம் ..
பகலின் நிழல் ..
நிழலின் வெளிச்சம்..

காமத்தின் போர்வை ..
கடல் எனும் துளி ..
மைதுனத்தின்  வியர்வை ..
தீரா பசி ..
அடங்கிவிட்ட  வறுமை..
அடங்கா கற்பனை ..
கவியின் வார்த்தை ..
விதவையின்  வர்ணம் ..
நான் எனும் கர்வம் ..
நீ எனும் நான் ..
நாம் எனும் கலவி ..
இனி இருள் எனது பேரண்டம் ..
நான் -பேரண்டத்தின் நிழல் !!


மௌனத்தின் வார்த்தை ....

தெரிந்த சொற்க்களை கொண்ட   
கவிதை - சிறிது .
உணரா மௌனங்களின்
அர்த்தம்  - பெரிது
நீண்ட நெடு  பயணத்தில்
மீதம் - என் மௌனமே.
வழிபோக்கனை முத்தமிட
தோன்றும் எண்ணம்
அபத்தமா? ஞானமா ?!
நான் எழுதிய வார்த்தைகளில்
நீங்கள் ஆயிரம் பிழைகளை
காணலாம் ...
நான் எழுதாத என் மௌனத்தை
என் செய்வீர் ...??
இன்று தண்டனைக்குரியது கவிதை மட்டுமே ..
நான் இல்லை ...