Friday, November 29, 2013

ரயில்வே கேட் ஆயா..!!!

மறந்தே போச்சிஎன்று சொல்லும் எந்தவொரு மனிதனும் ஒருபோதும் மறப்பதேஇல்லை தங்கள் வாழ்வில், நினைவில் பதிந்து போன ஞாபகங்களை, மனிதர்களை.

அப்படி ஒருபோதும் மறக்க முடியாதஒருத்தியாக என் வாழ்வில் நிறைந்து போனவள்தான், இந்த “ரயில்வே கேட் ஆயா”.
யார் இந்த ஆயா..?இவருக்கும் எனக்கும் என்ன உறவு.
என் பால்யத்தின் நினைவுகளை,தன் அன்பால் தூக்கித் திரிந்தவள்.காலைகடனுக்கு கூட்டிச்செல்வது முதல் , மாலை ஊட்டி வருக்கி வாங்கித் தருவது வரை என் அருகிலேயே இருந்தவள்.எனது அழுகையை ஒரே ஒரு முத்தத்தால் நிறுத்தியவள்.தனது வெந்து போன சுண்ணாம்புவிரல்களால் எனக்கு மை பூசி அழகு பார்த்தவள்.எனது சமீபத்திய நினைவுகளில் அடிக்கடிசிரிப்பினை வீசுபவள்.எனக்காக பரிசளிக்க பித்தளை மோதிரத்தை அணிந்து வரும் இளைத்த நிழல்அவள். எனது தந்தையின் வழி தூரத்துச் சொந்தம் என்று அம்மா சொல்ல அவரை பற்றி அறிந்துகொண்டேன்.எனது அம்மாவின் வழி தாத்தா , பாட்டியும் ,அப்பாவின் வழி தாத்தா,ஆயாவும்
நான் பிறப்பதற்கு முன்பாகவே பிறவிப் பயன் அடைந்து விட்டார்கள்.எனக்கு விவரம்தெரிந்த நாள் முதல் எனக்கு ரயில்வே கேட் ஆயாவை மட்டும்தான் தெரியும்.என்னுடையகிராமத்தில் இருந்து ஐந்து கிராமங்கள் தள்ளி இருக்கும் பொன்னம்மாபேட்டை என்றகிராமத்திற்கும் , நகரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில , தனது 10*6 சதுரடி குடிசையில் வாழ்ந்துகொண்டிருப்பவள்.
எழுபது வயதை கடந்துவிட்ட ,எனது பால்ய நினைவுகளின் தேவதை அவள் .தொலைப்பேசியில்பேரன்களின் குரலை கேட்டுக் கொண்டிருக்கும் பாட்டிகளை விட,பேராண்டிகளின் ஆயினைதுடைத்துக் கொண்டிருக்கும் ஆயாக்களின் உலகம் பெரிது.அப்படிப்பட்ட ஆயாவாக என்உலகத்தில் நிறைந்து போனவள்.நான் விழித்துக் கொண்டிருக்கும் போது எனை பார்க்க வரும்ஆயா , நான் உறங்கிய பிறகுதான் தன் வீடு திரும்புவாள்.
வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து தரும் தொழில் செய்து வந்தவள். அத்தொழில்செய்வது எவ்வளவு கடினம் என்பதை அவரை பார்த்துதான் அறிந்து கொண்டேன்.சுண்ணாம்புத் துளிவிழுந்தே சிவந்து போன அவளின் கண்களில் வழிந்து கொண்டே இருந்த கண்ணீர் துளிகள்,இன்றும் ஒழுக்கிக் கொண்டேதான் இருக்கிறது என் நினைவுகளில். என் வாழ்வில் நான்விரும்பிய ஒரே ஒரு ஆயாவாக அவள் மட்டுமே இருந்தாள், இருக்கிறாள். ஒவ்வொரு முறை எனை காண வரும்போதெல்லாம் , நான் விரும்பும் இனிப்புபாக்கினை எனக்காக வாங்கி வந்தவள்.அவளது மடியிலேயே அமர்ந்து , சிரித்து , விளையாட ,தன்நீண்ட பெரும்மூச்சினை எனக்காக தந்தவள்.பட்டாம் பூச்சியாய் அவள் மேல் அமர்ந்துதட்டான் (தும்பி) பிடித்த நாட்கள்,எனை இன்றும் சிறுவனாகவே உணரச் செய்கிறது.ஒருபோதும் சாயம் இழக்காத வானவில்லாக தோன்றிக் கொண்டே இருக்கிறாள் ரயில்வே கேட் ஆயா.படங்களின்மேல் தீராத காதல் கொண்டவள்.எனை பார்க்க வரும்போதெல்லாம் ஆயிரம் திரைப் படங்களோடுவந்தவள்.
தன் கதையோடு , திரைக் கதைகளையும் சேர்த்து, இன்றும் ஓடிக் கொண்டே இருக்கிறாள் முடிவில்லாமல்.தான் முதன் முதலாக எம்.ஜி.ஆரை பார்த்ததை அடிக்கடி சொல்லி சொல்லி தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, மேலும் மேலும்எம்.ஜி.ஆரை சிவப்பாக்கியவள். .அன்று முதல் இன்று வரை வெளியாகும் அத்தனை படங்களையும்முதல் ஆளாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவள் .விசி தம்பி நல்லா ஆடுது , அசீதுதம்பி சுண்ணாம்பு மாதிரி வெள்ளையா இருக்கு ,இப்படி வர்ணித்து வர்ணித்து தனதுவாழ்வை திரைப்படங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவள்.அவருடன் சேர்ந்து ஒரு படம் கூடபார்க்கவில்லையே என்ற ஏக்கம் இன்றும் எனக்கு உண்டு.
மனிதன் திரையில் பார்க்காத படங்களை தன் வாழ்விலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறான்.ஒருபோதும் அத்திரை கிழிவதே இல்லை.


ஆயாவை கட்டிக் கொண்டு விளையாடும் போதெல்லாம்,அவருக்கு இருக்கும் காச நோய்எனக்கும் தொற்றிக் கொள்ள கூடாது என்பதற்காக , சாடையாக அவரை திட்டும் சொந்தங்களின்பேச்சால், தனக்கு விருப்பம் இல்லாமலேயே கண்ணீரோடு எனைவிட்டு விலகிச் சென்றவள்.
அட மானுடமே, அழிந்து போகும் மனிதர்களுக்குத்தான் காச நோய் , அன்பிற்கு ஒருபோதும்இல்லை.


வயது மாற்றத்தால், இட மாற்றத்தால்,கால மாற்றத்தால் , இப்படி பல்வேறு மாற்றங்களால் நம்முடைய நினைவுகள் தேய்ந்துபோகுமே தவிர, ஒரு போதும் அழிந்து போகாது.விவேக் என்ற என் பெயரை விவேக்கு என்றுஅவளால் மட்டுமே அழைத்திட முடிந்தது.அவளது வீட்டுக்கு அருகில் இருக்கும் “ரயில்வே கேட் கிராசிங்”( railway gate crossing)தான் இன்றளவும் அவளதுநினைவுகளை தனது தண்டவாளத்தோடு சேர்த்து கொண்டுள்ளது.


எனக்கு முனியம்மாவைஒருபோதும் தெரியாது. எப்பொழுதும் அவள் ரயில்வே கேட் ஆயா தான் எனக்கு. கடைசியாக ஆயாவை பார்த்து,இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. மீண்டும் பார்க்க சீக்கிரம் ஊருக்கு செல்வேன்.அதுவரை உனது முதுமை நினைவிலிருந்து எனை நீக்காமல் வைத்திருப்பாயாஆயா..?


ஒருபோதும் அமராத பறவையாக பறந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை.நீண்டநெடும்பயணத்தில் அது மனிதர்களை மட்டுமே விழுங்குகிறது,நினைவுகளை அல்ல.பறவையினுள்அடைபட்ட வானமாய் நம் நினைவுகள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.ஆயிரமாயிரம்முகங்கள் ,ஆயாவாக , தாத்தாவாக,வாட்ச் மேனாக ,டி கடை சிறுவனாக,ஸ்கூல்டீச்சராக,இறந்து போன நண்பனாக,பிரிந்து போன காதலியாக இப்படி யார் யாராகவோ நிறைந்துகொண்டே இருக்கிறார்கள் நம் வாழ்வில்.


ஒரு போதும் நிரம்பாத கோப்பையாக வாழ்க்கை இருக்கிறது.
நினைவுகளை பருகாத உயிராக மனிதன் இருக்கிறான்.

Tuesday, October 29, 2013

ஒரு பயணமும்,நூறு வாழ்க்கையும்.!!

சமீபத்திய  நிகழ்வுகள்,என்னை பயணங்கள் மேற்கொள்ள தூண்டுகிறது.மனிதர்கள் அதிகமாக வசிக்காத இடங்கள்,பறவைகளைபார்க்க இயலும் விடியற்காலைகள்,மூச்சுக் காற்றின் ஓசை துல்லியமாக கேட்கமுடிந்தநிசப்தம்.இப்படி சராசரி நிலைகளில் இருந்து வேறுபட்ட இடம் ஒன்றை நோக்கி எனைதள்ளுகிறது, என் மனம்.

  எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் பயணம்தேவைப்படுகிறது.அது ஏதோ ஒரு நிலையிலிருந்து ,தன்னை விடுவித்துக் கொள்ள, நாம்முயன்றுகொண்டிருக்கும் நிலை. நிறைய வேலைகள்,கனவுகள் இருந்தாலும் அவ்வப்போது பயணம்தேவைபடுகிறது.அது உள்ளுக்குள் தன்நிலை தேடும் பயணம்.உலகத்தை,உணர்வுகளை,மனிதர்களை,இயற்க்கையை புரிந்துகொள்ள நாம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயப்பயணம்.அதற்க்கான வழிகளை நாமாக அமைத்துக்கொள்ள கூடிய பயணம்.

 குருவிகளின் விளையாட்டை நிதானமாக ரசிக்க,நம் சராசரி வாழ்க்கை இடமளிப்பதில்லை.மாறாக குருவிகளே இல்லாத தேசத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.அப்படி குருவிகளை , எறும்புகளை , பறவைகளை , மீன்களை நிதானமாகநமக்குள் கொண்டு சேர்க்க,நமக்கான பயணம் தேவை.இயற்கையோடு பயணிக்க ஒரு மனநிலைவேண்டும்.அது மனிதர்களிடம் இருக்கும் சராசரி இயற்க்கை பற்றிய புரிதலைவிட மேலானது.நாம்வனத்தை பார்த்ததுண்டு.ஆனால்.., உணர்ந்ததுண்டா ..?நீண்ட வனம் நம் மனமெங்கும் பரவி இருக்கிறது.அங்குஎல்லாமே வசித்துக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் யாருடைய கட்டுப் பாட்டில்.?நாம்வனத்திற்கும் வேலி போட்டுவிட்டோம்.வனத்தின் அடர்த்தியை உணர முடியாத வேலியொன்றைஅமைத்து விட்டோம்.


  பயணம் எனை மாற்றிவிடுமா என்றால்,எனக்கு தெரியாது.ஆனால் எந்த பயணத்தை தொடர வேண்டும் என்பதை,ஒரு பயணத்தில்தான்தெரிந்து கொள்ள முடியும் என்பதை, நான் நம்புகிறேன்.அதற்க்காக ஒரு பயணம் தேவை.


 மனிதர்களை பற்றி , மனிதர்கள் இல்லாதஇடத்தில்

தெரிந்து கொள்ளும் பயணம்.

X – வாழ்க்கை..!!

வாகனத்தை விரட்டிச் சென்று,
நின்று விட்ட நாயென,
பரிதாபமாய் தவிக்கிறது
மனம்.

எதிர்ப்படும் நிஜங்களின்
உருவம் வர்ணங்களற்று
தெரிகிறது.

யாரும் தேவையில்லை
என்றான பின்னும்,
தேவையில்லாமல்
குழம்பிக் கொள்கிறது வாழ்க்கை.

நம்பிக்கை மீதான
சந்தேகம்,
சந்தேகமில்லாமல் விளங்குகிறது.

விலகிச் சென்றோரின்
நிஜத் தன்மை,
நீண்ட இடைவெளிக்குப் பின்
தெளிவாகிறது.

யாதும் கடந்து செல்வதே,
இதுவும் கடந்து போகும்..!!

மரணமும், மறுநிமிடமும்.....

மரணம், அதுதனியொரு உயிரின் இழப்பு மட்டும் அல்ல.மீதமிருக்கும் நம் காலங்களில் ,பிறரிடம் நாம்காட்டவேண்டிய அன்பிற்க்கான நினைவூட்டலும் கூட.

  மரணத்தை பற்றி புதிதாக விவரிக்கவோ ,ஆய்வு செய்யவோ ஏதேனும் மீதம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.ஆனால், அது இழப்பு. நம்முடன் பயணித்த ,நம்முடன் உரையாடிய , நம்முடன் சிரித்துவிளையாடிய ,நம் அருகில் அமர்ந்திருந்த ஒரு உயிரின் இழப்பு.நம் வாழ்வில் மீண்டும்காண முடியாத ஒரு உயிரின் இழப்பு.

  காரணமின்றி உள்நுழையும் காற்றைப்போலதான்,மரணனும்நுழைகிறது,நாம் எதிர்பார்த்தும்,எதிர்பாராமலும்.ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கட்டாயம்தான் என்றாலும், அவ்விழப்பிலிருந்து மீண்டுவருவதற்க்கான மனச் சூழல், காலம் காலமாக ஒரே சூழலில்தான் இருக்கிறது.அதுவெற்றிடம்.ஓர் உயிர் இருந்த இடத்தில், இப்பொழுது இருக்கும் அளவற்ற வெற்றிடம்.

  மரணம் ஏன் வருகிறது என்பதற்க்கானவிளக்கம் நம்மால் அவ்வளவு எளிதாய் சொல்லிவிட முடியாது.மாறாக,அது விட்டுச் செல்லும்மீதமிருக்கும் காலத்திற்க்கான பொருளை தவிர,மரணம் உணர்த்திச் செல்வது வேறொன்றும்இல்லை.மரணம், அது நிச்சயம் என்றாவது நிகழவிருக்கும் ஒன்றுதான் என்றாலும்,உள்ளுக்குள் அதை எதிர் கொள்ளவேண்டிய கட்டாய முரண்தான், நம்மை பயம் கொள்ளச் செய்கிறது.

  மரணத்தை எதிர் கொண்ட வீடு எப்படிஇருக்கும்.

அவ்வீட்டில் உள்ளோரது மனநிலையை எப்படி தேற்றிவிட முடியும்.
கூடி ஆறுதல் சொல்லலாம்,கண்ணீர் துடைத்துவிட்டு ,நம் கரங்களை ஈரமாக்கிக்கொள்ளலாம்.தோள்பற்றி அழுபவரின் மூச்சினை ஆசுவாசப் படுத்தலாம்.எத்தனை ஆறுதல் எப்படிசொன்னாலும்,மனம் தன்னை மூடிக் கொண்டிருக்கும் போது இழந்தவர்களின் உள்ளே, எதுநுழைந்துவிடமுடியும்?அவர்கள் என்ன யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நம்மால் ஒருபோதும் ஊகித்துவிடமுடியாது.

   தாங்கள் இழந்த அவ்வுயிரின்நினைவுகளையா..?இல்லை, எதிர் கால வாழ்வின் புதிர்களையா..?எதை யோசித்துக்கொண்டிருப்பார்கள்.?இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளை ஒரு இழப்பு விட்டுச் செல்கிறது.

  மரணம் ஒரு உயிரை எடுத்துக் கொண்டு ,ஓராயிரம் தத்துவங்களையும் ,வாழ்வின் யதார்த்தத்தையும் மீதமிருக்கும் உயிர்களுக்காகவிட்டுச் செல்கிறது.மரணம்,அது தன்னை இழந்து வாழ்வை சொல்லிக் கொடுக்கும் மகத்தானஆசான்.

.   மரணம் உணர்த்திச் செல்வது ஒன்றைதான்.
அது நினைவுகள். இழந்த ஒரு உயிரின் கடந்த கால நினைவுகள்.எதிர் காலத்தில் அவ்வுயிரைபற்றி நாம் சேகரித்து வைக்கவிருக்கும் ஞாபகங்கள். காற்றோடு இங்குமங்குமாய் சுழன்றுகொண்டிருக்கும் ஒரு இலையை போன்று பயணித்த நினைவுகள்.

  என்றாவது ஒரு நாள் ,,?இல்லை இந்தநிமிடம்,.? இல்லை நாளை...இப்படி என்றாவது, நாம் இறக்கத்தான் போகிறோம் என்பதை,நாம்ஏற்றுக் கொள்ள இயலாவிட்டாலும்,அதுதான் மரணம் பற்றிய யதார்த்தத்தின் நகைமுரண்.

   மரணத்தின் அடுத்த நிமிடத்திலிருந்துஎத்தனை காலம் அடுத்தவர் நினைவில் அழியாமல் பதிந்து கிடக்கப்  போகின்றோம் என்பதைத்தான், மரணம் தன்னைஇழக்கச்செய்து, அதன்வழி சொல்லிச் செல்கிறது.

மரணம்,அது வெறும் இழப்பு மட்டும் அல்ல.
நம் வாழ்வின், மறு நிமிடத்துக்கான தொடக்கமும் கூட.

Life has to go ....!!!

ஏன் இழப்புகளின் மீதான
நினைவுகள் - நம்
தனிமையில் தீவிரமடைகிறது..?

யார் அவ(ர்க)ள் ..?
என்னுடனான உறவை
எளிதில் துண்டித்த(வர்க)ள்.

ஆசுவாசமான அலைகளில்
அடித்து வரப்படும்
கிளிஞ்சல்களை போல்
என் வாழ்வில் நுழைந்த(வர்க)ள்..!!

சரியான காரணங்களற்ற பிரிவில்
மனம், ஒரு போதும்
சாந்தமடைவதில்லை.

அவ(ர்க)ளுக்கும் அப்படித்தான்
இருக்க வேண்டும், என்றெண்ணுவது
முரண் கொண்ட வாழ்வின் யதார்த்தம்.

நாளொரு வண்ணம்..!!

எங்கே போனாய் நீ..., .?

நீண்ட பயணத்தில் 
நிறுத்துமிடம் இல்லாத சாலை தோறும் 
பயணித்துக் கொண்டே இருக்கிறது என் மனம்.

ஆசுவாசமாய் உடல் சாய்ந்து,
ஓரிரு வார்த்தைகள் பேசி 
நீண்ட நாட்களாகி விட்டது .

எவரிடத்திலும் பகிர்ந்து கொள்ள 
இயலவில்லை என்னால் - என் 
தனிமையின் சலனத்தை.

நீயாக வீசிவிட்டுப் போன சிறகொன்று 
எதனை பின்தொடர இயலும் 
காற்றில்லா இவ்வெளியில்..!!

இருளில் ஒளிந்துகொண்ட 
நிழலானப் பின் 
உன்னை எங்கே தேடுவேன்..?

ஸ்டார் பிரியாணியும் , மணிப்பூர் தானியாலும்..!!

    கடந்த ஆறு மாதங்களில்,நான் அதிகமாக சாப்பிட்ட உணவு பிரியாணி தான்.அதற்க்கு காரணம் ஸ்டார் பிரியாணிகடையில்  மேஜை துடைக்கும் வேலை செய்யும்மணிப்பூரை சேர்ந்த “தானியால்” தான்.யார் இவர் ?தங்கள் சொந்தமண்ணை விட்டு விட்டு இங்கே வந்து தவித்துக் கொண்டிருக்கும் பல ஆயிரம் முகங்களில்இவரும் ஒருவர்.எங்களை பார்க்கும் போதெல்லாம் புன்னகை உதிர்க்கும் தமிழ் அறியா பூ. நமஸ்தே பாய் என்று ஒவ்வொரு முறை இவர்சொல்லும் போதும் , ஏதோ ஒரு காலத்தில் நான் தவறவிட்ட மனித உறவுகளை மீண்டும் உயிர்த்தெழசெய்யும் மாயம் என்றே தோன்றும் எனக்கு.இத்தனை மாத காலத்தில் ஒரு முறை கூட இவரைசோம்பலாக நான் பார்த்தது கிடையாது.அதே போல் இத்தனை முறை அங்கே சென்றதில் ஒரு முறைகூட அவரை பற்றி நான் விசாரித்ததும் கிடையாது.எப்பொழுதும் சிரித்த முகம்,யாரும்கட்டளை இடும் முன்பே மேஜைகளை சுத்தமாக துடைத்து வைக்கும் பொறுப்புணர்ச்சி.இப்படிதன் வேலைகளை மனம் கூசாமல் மொழி அறியா மாநிலத்தில் செய்து கொண்டிருக்கும் ஒருமகத்தான உழைப்பாளி. “TO INSURE PROMPT SERVICE”(TIPS) என்ற வாக்கியத்தின்அர்த்தம் இவருக்காக உருவாக்கப் பட்டதாகவே இருக்கும் என்ற , என்னுடைய எண்ணம் இதுவரைபொய்யாகவில்லை. அப்படி ஒரு பொறுப்புணர்ச்சி அவரிடம்.

பல நேரங்களில் அங்கே சாப்பிட வரும் நம் மக்கள் நடந்து கொள்ளும் விதம் , மனதை காயப்படுத்துவதாகவே இருக்கிறது.விரல் சொடுக்கி அவர்களை கூப்பிடுவது , தாமதமாக வந்தால்ஏதோ கூடங்குளம் அளவுக்கு கோபப் படுவது.அவர்களுக்கு தெரியாது என்று தெரிந்தே நம்மொழியில் அவர்களை திட்டுவது, அவர்களுடன் சேர்ந்து கடையின் உரிமையாளரும் (தமிழர்)அவரை திட்டுவது.எதற்காக திட்டு வாங்குகிறோம் என்று தெரியாமலேயே நகி பாய் , டீக்கே பாய் என்று தங்களின் வேலையைகவனிப்பது, இப்படி ஒவ்வொரு நாளும் இவர்களின் பயணம் மனித சாலைகளில் மனம் இல்லாமல்ஓடிக் கொண்டிருக்கிறது.என்ன பாவத்தை இவர்கள் செய்து விட்டதால் ,இவர்களுக்கு இப்படிஒரு வாழ்க்கை அமைந்து விட்டது.அவர்கள் மாநிலத்தில் போதிய வேலை இல்லை, அவர்களின்குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயம் , தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும்வாங்கித் தரவேண்டும் என்ற சராசரி அப்பாக்களின் கனவு, இப்படி நம்மை போலதான்அவர்களும் வாழ்க்கையை வாழ்கிறார்கள், இருந்தும் தங்களுடைய தேவைகள் அனைத்தையும்பல்வேறு அவமானங்களை தாங்கியே அவர்கள் பெறுகிறார்கள் என்பதே மிகவும் கசப்பான உண்மை .அங்கேவேலை செய்யும் முக்கால்வாசி பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் தான்.தங்கள் சகதொழிலாளியை தவிர வேறு எந்த உறவோ , உரையாடிக் கொள்ளும் சூழலோ , வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில் இல்லை என்பதுதான் உண்மையின் முகம்.இதுபோன்ற ஆயிரமாயிரம் தானியால்கள்சென்னையின் ஒவ்வொருதெருவிலும் , சந்திலும் , துரித உணவகத்திலும் , பெரும் அங்காடிகளிலும் , பணக்காரகளின்வீட்டு நுழை வாயில்களிலும் ,இருவு நேர மேம்பாலம் கட்டும் பணியிடங்களிலும் தங்களுடையவாழ்க்கையை மெளனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வேறு வழி இல்லாமல்.

   பீகாரிலிருந்து இங்கே திருட வருகிறான் என்றால்  ,நம்மை விட அவனுக்கு அதிகமாக தெரிந்திருக்கிறது, இங்கே கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று.அவன் செய்யும்திருட்டை ஞாயப்படுத்த முடியாதென்றாலும்,அவர்களை புரிந்து கொள்ளாமல் இருக்கும் இந்தஅரசை மட்டுமே குறை சொல்ல தோன்றுகிறது.அவர்களுக்கான வாழ்வாதாரம் இல்லாதபோது ,அவர்களாகவே தேடிக் கொள்கிறார்கள் தங்களுக்கான வாழ்வை.நாம் சோம்பேறிகளாகமாறிவிட்டோம் என்பது , அவர்கள் நம்மூரில் இருக்கும் எண்ணிக்கையை வைத்தேசொல்லிவிடலாம்.இங்கே நம்மவர்களை வேலைக்கு வைத்தால் சரியான கூலி தரவேண்டும் ,இல்லையென்றால் தரை டிக்கெட் அளவுக்கு மானத்தை வாங்கிவிடுவார்கள்.இதற்காகவேவெளிமாநிலத்தில் இருந்து பல ஆயிரம் பேரை அகதிகளாக , அடிமைகளாக , குறைந்தசம்பளத்திற்கு இறக்குமதி செய்கிறார்கள்.அவர்கள் மனித உடலை கொண்ட எந்திரங்கள்.முதலாளிகளுக்கும், தொழிலாளிக்குமான உரையாடல் இவர்களுக்கு கிடையாது.இவர்களுக்கு என்ன தேவை என்பதைஇவர்கள் கேட்கமுடியாத சூழல் , மற்றும் மொழி பிரச்சனை எப்பொழுதும் உண்டு .இடைத்தரகர்கள்தான் இவர்களின் குலத் தெய்வங்கள்.அவர் சொல்வதுதான் சம்பளம் , அவர் சொல்வது தான்வேலை நேரம் , இப்படி மனித எந்திரங்களாக , அவர்களின்  இயலாமையை பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான்மறுக்க முடியாத உண்மை.சொந்த மண்ணை விட்டு வெளியே சென்று வேலை பார்க்கும் அத்தனைமுகங்களுக்கும் இது பொதுவான ஒன்றாகவே இருந்து வருகிறது.அது தமிழனாக இருந்தாலும் ,இல்லை எந்த
மாநிலத்தவராக இருந்தாலும் இதுவே கதி.பெரும் படிப்பு படித்து விட்டு கடல்கடந்து , மண் கடந்து வேலை பார்க்கும் பெரும் புத்திசாலிகளுக்கு கூட அவர்களின்நிலைக்கேற்றவாறு அவமானங்களை சந்தித்து வருகிறார்கள் என்பதுதான் நாடுகளுக்கிடையே ,மாநிலத்துகிடையே நடந்து கொண்டிருக்கும் அவமானப் போர்.

 கடந்த வாரம் ஸ்டார் பிரியாணி கடைக்குசென்ற போதுதான் ,தானியாலைபற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.சாப்பிட்டு முடித்துவிட்டு வழக்கம் போல் பில்லுக்காக காத்திருந்தோம்.தானியாலும் வழக்கம்போல் எங்களின்மேசையை சுத்தம் செய்ய வந்தார்.அவரிடம் உரையாட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமேஇருந்ததே தவிர, அவரிடும் உரையாடுவதர்க்கான மொழி என்னிடம் இல்லை. இருந்தாலும்எனக்கு தெரிந்த ஓரிரு ஹிந்தி வார்த்தைகளை சேர்த்து அவரின் பெயர் தானியால் என்றும் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும் தெரிந்து கொண்டேன்.

   கடைசியாக நான் அவரிடம்கேட்டது , துமாரா மா பாப்பா கிதர் ஹென்?எந்த மொழியில் கேட்டாலும் அம்மாவையும் , அப்பாவையும் நாம்புரிந்து கொள்வதுதான் மனிதன் தன்னுள்ளே வைத்திருக்கும் மகத்தான உணர்வுச்செல்வம்.இந்த கேள்விக்கு அவரிடும் இருந்து வந்தது வார்த்தைகள் அல்ல , அதற்க்குமாறாக செய்கை மட்டுமே. தன்னுடை தலையை ஒரு புறமாக சாய்த்து ,தன வலது கையைகன்னத்தில் படாதவாறு வைத்து, வானத்தை பார்த்து இடது வலமாக தன் தலையை அசைத்து ஒரேஒரு வார்த்தை மட்டுமே சொன்னார். மர்கயா. தன் இறகை அசைக்க முடியாத பறவையாகவே நிலையற்று போனேன்.என்னபேசிவிட முடியும் இதற்க்கு பிறகும்.மொழியற்ற ஊமையாக உறைந்து போனது எனது இருப்பு.

 வெளியே வந்த பிறகும் மர்கயா என்றவார்த்தை ஓடிகொண்டே இருந்தது என் மனதில்.வாகனத்தில் புறப்படும் முன்பு , அவசரமாகவெளியே வந்ததானியால்,குட் நைட் பையா என்று எங்களை பார்த்து கையை அசைத்தார்.

 “தானியால் நண்பா நாங்கள் எப்படியேனும் உறங்கிவிடுவோம்.
நாங்கள் தாய்மண்ணில் இருக்கின்றோம்.
நீ நன்றாக உறங்கு என்ற எண்ணம் மட்டுமே என்னுள் ஓடியது.

 நாளை விடியும் கிழக்கு உனக்கானதாய் இருக்கட்டும்நண்பா...!!!