Tuesday, October 29, 2013

ஸ்டார் பிரியாணியும் , மணிப்பூர் தானியாலும்..!!

    கடந்த ஆறு மாதங்களில்,நான் அதிகமாக சாப்பிட்ட உணவு பிரியாணி தான்.அதற்க்கு காரணம் ஸ்டார் பிரியாணிகடையில்  மேஜை துடைக்கும் வேலை செய்யும்மணிப்பூரை சேர்ந்த “தானியால்” தான்.யார் இவர் ?தங்கள் சொந்தமண்ணை விட்டு விட்டு இங்கே வந்து தவித்துக் கொண்டிருக்கும் பல ஆயிரம் முகங்களில்இவரும் ஒருவர்.எங்களை பார்க்கும் போதெல்லாம் புன்னகை உதிர்க்கும் தமிழ் அறியா பூ. நமஸ்தே பாய் என்று ஒவ்வொரு முறை இவர்சொல்லும் போதும் , ஏதோ ஒரு காலத்தில் நான் தவறவிட்ட மனித உறவுகளை மீண்டும் உயிர்த்தெழசெய்யும் மாயம் என்றே தோன்றும் எனக்கு.இத்தனை மாத காலத்தில் ஒரு முறை கூட இவரைசோம்பலாக நான் பார்த்தது கிடையாது.அதே போல் இத்தனை முறை அங்கே சென்றதில் ஒரு முறைகூட அவரை பற்றி நான் விசாரித்ததும் கிடையாது.எப்பொழுதும் சிரித்த முகம்,யாரும்கட்டளை இடும் முன்பே மேஜைகளை சுத்தமாக துடைத்து வைக்கும் பொறுப்புணர்ச்சி.இப்படிதன் வேலைகளை மனம் கூசாமல் மொழி அறியா மாநிலத்தில் செய்து கொண்டிருக்கும் ஒருமகத்தான உழைப்பாளி. “TO INSURE PROMPT SERVICE”(TIPS) என்ற வாக்கியத்தின்அர்த்தம் இவருக்காக உருவாக்கப் பட்டதாகவே இருக்கும் என்ற , என்னுடைய எண்ணம் இதுவரைபொய்யாகவில்லை. அப்படி ஒரு பொறுப்புணர்ச்சி அவரிடம்.

பல நேரங்களில் அங்கே சாப்பிட வரும் நம் மக்கள் நடந்து கொள்ளும் விதம் , மனதை காயப்படுத்துவதாகவே இருக்கிறது.விரல் சொடுக்கி அவர்களை கூப்பிடுவது , தாமதமாக வந்தால்ஏதோ கூடங்குளம் அளவுக்கு கோபப் படுவது.அவர்களுக்கு தெரியாது என்று தெரிந்தே நம்மொழியில் அவர்களை திட்டுவது, அவர்களுடன் சேர்ந்து கடையின் உரிமையாளரும் (தமிழர்)அவரை திட்டுவது.எதற்காக திட்டு வாங்குகிறோம் என்று தெரியாமலேயே நகி பாய் , டீக்கே பாய் என்று தங்களின் வேலையைகவனிப்பது, இப்படி ஒவ்வொரு நாளும் இவர்களின் பயணம் மனித சாலைகளில் மனம் இல்லாமல்ஓடிக் கொண்டிருக்கிறது.என்ன பாவத்தை இவர்கள் செய்து விட்டதால் ,இவர்களுக்கு இப்படிஒரு வாழ்க்கை அமைந்து விட்டது.அவர்கள் மாநிலத்தில் போதிய வேலை இல்லை, அவர்களின்குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயம் , தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும்வாங்கித் தரவேண்டும் என்ற சராசரி அப்பாக்களின் கனவு, இப்படி நம்மை போலதான்அவர்களும் வாழ்க்கையை வாழ்கிறார்கள், இருந்தும் தங்களுடைய தேவைகள் அனைத்தையும்பல்வேறு அவமானங்களை தாங்கியே அவர்கள் பெறுகிறார்கள் என்பதே மிகவும் கசப்பான உண்மை .அங்கேவேலை செய்யும் முக்கால்வாசி பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் தான்.தங்கள் சகதொழிலாளியை தவிர வேறு எந்த உறவோ , உரையாடிக் கொள்ளும் சூழலோ , வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில் இல்லை என்பதுதான் உண்மையின் முகம்.இதுபோன்ற ஆயிரமாயிரம் தானியால்கள்சென்னையின் ஒவ்வொருதெருவிலும் , சந்திலும் , துரித உணவகத்திலும் , பெரும் அங்காடிகளிலும் , பணக்காரகளின்வீட்டு நுழை வாயில்களிலும் ,இருவு நேர மேம்பாலம் கட்டும் பணியிடங்களிலும் தங்களுடையவாழ்க்கையை மெளனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வேறு வழி இல்லாமல்.

   பீகாரிலிருந்து இங்கே திருட வருகிறான் என்றால்  ,நம்மை விட அவனுக்கு அதிகமாக தெரிந்திருக்கிறது, இங்கே கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று.அவன் செய்யும்திருட்டை ஞாயப்படுத்த முடியாதென்றாலும்,அவர்களை புரிந்து கொள்ளாமல் இருக்கும் இந்தஅரசை மட்டுமே குறை சொல்ல தோன்றுகிறது.அவர்களுக்கான வாழ்வாதாரம் இல்லாதபோது ,அவர்களாகவே தேடிக் கொள்கிறார்கள் தங்களுக்கான வாழ்வை.நாம் சோம்பேறிகளாகமாறிவிட்டோம் என்பது , அவர்கள் நம்மூரில் இருக்கும் எண்ணிக்கையை வைத்தேசொல்லிவிடலாம்.இங்கே நம்மவர்களை வேலைக்கு வைத்தால் சரியான கூலி தரவேண்டும் ,இல்லையென்றால் தரை டிக்கெட் அளவுக்கு மானத்தை வாங்கிவிடுவார்கள்.இதற்காகவேவெளிமாநிலத்தில் இருந்து பல ஆயிரம் பேரை அகதிகளாக , அடிமைகளாக , குறைந்தசம்பளத்திற்கு இறக்குமதி செய்கிறார்கள்.அவர்கள் மனித உடலை கொண்ட எந்திரங்கள்.முதலாளிகளுக்கும், தொழிலாளிக்குமான உரையாடல் இவர்களுக்கு கிடையாது.இவர்களுக்கு என்ன தேவை என்பதைஇவர்கள் கேட்கமுடியாத சூழல் , மற்றும் மொழி பிரச்சனை எப்பொழுதும் உண்டு .இடைத்தரகர்கள்தான் இவர்களின் குலத் தெய்வங்கள்.அவர் சொல்வதுதான் சம்பளம் , அவர் சொல்வது தான்வேலை நேரம் , இப்படி மனித எந்திரங்களாக , அவர்களின்  இயலாமையை பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான்மறுக்க முடியாத உண்மை.சொந்த மண்ணை விட்டு வெளியே சென்று வேலை பார்க்கும் அத்தனைமுகங்களுக்கும் இது பொதுவான ஒன்றாகவே இருந்து வருகிறது.அது தமிழனாக இருந்தாலும் ,இல்லை எந்த
மாநிலத்தவராக இருந்தாலும் இதுவே கதி.பெரும் படிப்பு படித்து விட்டு கடல்கடந்து , மண் கடந்து வேலை பார்க்கும் பெரும் புத்திசாலிகளுக்கு கூட அவர்களின்நிலைக்கேற்றவாறு அவமானங்களை சந்தித்து வருகிறார்கள் என்பதுதான் நாடுகளுக்கிடையே ,மாநிலத்துகிடையே நடந்து கொண்டிருக்கும் அவமானப் போர்.

 கடந்த வாரம் ஸ்டார் பிரியாணி கடைக்குசென்ற போதுதான் ,தானியாலைபற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.சாப்பிட்டு முடித்துவிட்டு வழக்கம் போல் பில்லுக்காக காத்திருந்தோம்.தானியாலும் வழக்கம்போல் எங்களின்மேசையை சுத்தம் செய்ய வந்தார்.அவரிடம் உரையாட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமேஇருந்ததே தவிர, அவரிடும் உரையாடுவதர்க்கான மொழி என்னிடம் இல்லை. இருந்தாலும்எனக்கு தெரிந்த ஓரிரு ஹிந்தி வார்த்தைகளை சேர்த்து அவரின் பெயர் தானியால் என்றும் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும் தெரிந்து கொண்டேன்.

   கடைசியாக நான் அவரிடம்கேட்டது , துமாரா மா பாப்பா கிதர் ஹென்?எந்த மொழியில் கேட்டாலும் அம்மாவையும் , அப்பாவையும் நாம்புரிந்து கொள்வதுதான் மனிதன் தன்னுள்ளே வைத்திருக்கும் மகத்தான உணர்வுச்செல்வம்.இந்த கேள்விக்கு அவரிடும் இருந்து வந்தது வார்த்தைகள் அல்ல , அதற்க்குமாறாக செய்கை மட்டுமே. தன்னுடை தலையை ஒரு புறமாக சாய்த்து ,தன வலது கையைகன்னத்தில் படாதவாறு வைத்து, வானத்தை பார்த்து இடது வலமாக தன் தலையை அசைத்து ஒரேஒரு வார்த்தை மட்டுமே சொன்னார். மர்கயா. தன் இறகை அசைக்க முடியாத பறவையாகவே நிலையற்று போனேன்.என்னபேசிவிட முடியும் இதற்க்கு பிறகும்.மொழியற்ற ஊமையாக உறைந்து போனது எனது இருப்பு.

 வெளியே வந்த பிறகும் மர்கயா என்றவார்த்தை ஓடிகொண்டே இருந்தது என் மனதில்.வாகனத்தில் புறப்படும் முன்பு , அவசரமாகவெளியே வந்ததானியால்,குட் நைட் பையா என்று எங்களை பார்த்து கையை அசைத்தார்.

 “தானியால் நண்பா நாங்கள் எப்படியேனும் உறங்கிவிடுவோம்.
நாங்கள் தாய்மண்ணில் இருக்கின்றோம்.
நீ நன்றாக உறங்கு என்ற எண்ணம் மட்டுமே என்னுள் ஓடியது.

 நாளை விடியும் கிழக்கு உனக்கானதாய் இருக்கட்டும்நண்பா...!!!   

1 comment: