கருப்பன் , என்று உதவி தலைமையாசிரியர் அழைத்ததுமே எங்களுக்குள் பரவசம் தொற்றிக்கொள்ளும்.கருப்பன் என்ற சொல்லுக்கா இத்தனை விசேசம். இல்லை , இது அவர் கொண்டுவரவிருக்கும் சுற்றறிக்கைகாக(circular).பால்யமும் , பிழைகளும் ஒன்றாக பயணித்த காலங்கள் அவை.
காதல் என்ற வாழ்க்கைக்காக ஒவ்வொரு நாளும் அலைந்த வருடங்கள் அவை. யார் இந்த கருப்பன்.? நான் படித்த போதே அறுபது வயதை கடந்து விட்ட மனிதர்.நாளை விடுமுறை என்றால் இன்றே நாங்கள் தெரிந்து கொள்வது கருப்பன் தாத்தா மூலமாகத்தான்.நாங்கள் அவரை அப்பிடித்தான் அழைப்போம்.”வாட்ச்மேன் கருப்பன் தாத்தா”.மூன்று தலைமுறை மாணவர்களை கண்டவர்.நாங்கள் படித்த பள்ளி அடிக்கல் நாட்டிய நாளிலிருந்து அந்த பள்ளியில் வேலை செய்தவர்.இவர் வெறும் வாட்ச்மேன் மட்டும் இல்லை, இவர் இந்த பள்ளிக்காக , ஆசிரியர்களுக்காக எவ்வளவோ உழைத்திருக்கிறார்.இவர் பள்ளியில் அயர்ந்து தூங்கியதை நான் பார்த்தது இல்லை.இவரை காவலுக்கு வைத்து விட்டு பல ஆசிரியர்கள் உறங்கி இருக்கிறார்கள், தலைமையாசிரியர் வருவதை கண்காணித்து சொல்ல.கருப்பன் தாத்தா சுற்றறிக்கை கொண்டுவருவது அரைமணி நேரத்தில் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தெரிந்துவிடும்.பெரும்பாலும் அவர் கொண்டுவருவது நாளைய விடுமுறை பற்றியதாகவே இருக்கும்.சிலநேரங்களில் அனைத்து மாணவர்களும் கொடிநாளை முன்னிட்டு தலைக்கு 2 ருபாய் தரவேண்டும் என்ற சோகமான தவல்களையும் கொண்டுவருவார்.அனைத்து மாணவர்களும் காலையில் தமிழ் தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருக்க,எங்கோ ஒரு மூலையில் காக்கைக்கு சோறு போட்டுக்கொண்டிருப்பார்.இதை பலமுறை நான் பார்த்ததுண்டு.எங்களுக்கு தமிழ் தாய் வாழ்த்து, அவருக்கோ காக்கைகளின் பசி.கனவுகளுக்கு பின்னால் செல்லாமல் காலத்திற்கு பின்னால் சென்ற படிக்காத எளிமையான மனிதர்.கணக்கு டீச்சர் சந்தியா(உதவி தலைமையாசிரியர்) வருகிறார் என்றால் அனைத்து மாணவர்களும் மூச்சை நிறுத்தி அமைதியாக இருப்பார்கள்.இவர் மட்டும் வெத்தலை இடித்துக்கொண்டு அவரை பார்ப்பார்..வேலை நேரத்துல எங்க போனீங்க என்று சந்தியா டீச்சர் ஏதேனும் திட்டினால் ,அவர்தான் வாங்கிட்டு வரச்சொன்னாரு, ஹோடேல்லுக்கு போய் என்று தன்னை வேலை வாங்கிய வாத்தியாரை தயங்காமல் போட்டுகொடுப்பார்.சந்தியா டீச்சரின் ஞானம் அவரிடம் பலமுறை சமாதானம் ஆவதை , நாங்கள் ரசித்ததுண்டு.இவர் நடந்து பதித்த இடங்களின் மிச்சத்தில்தான் நாங்கள் பாடம் கற்றோம்.இவர் உட்புகாத வகுப்பறை அன்றுதான் கட்ட துவங்கி இருக்க வேண்டும். ஆசிரியர் யாருடைய வீட்டிலாவது துயர் சம்பவம் நடந்துவிட்டால் ,மற்ற ஆசரியர்களுக்கு முன்பாக இவர் அங்கு இருப்பார்.இவர் ஒரு போதும் ஆறுதல் சொல்லியதில்லை.ஆனாலும் இவர் அங்கு இருப்பார்.பின்வரும் ஆசிரியர்கள் ,கருப்பா இங்கேயே இருந்து வேணுங்கறது செய்ங்க ..என்று சொல்லிவிட்டு செல்வார்கள்.இவர் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டுவார்.இவர் பார்த்து வளர்ந்து நரைத்து,உயிர் விட்ட பழைய மாணவர்கள் நிறைய பேர் உண்டு.உங்க அப்பன் படிக்கிறப்ப எனக்கு அப்பப்ப காசு தருவான் என்று , இறந்தவரின் மகனிடம் பழைய நினைவுகளை பறக்க விடுவார்.அன்றைக்கு மட்டும் ஏனோ அவரிடம் சாராய நெடி அடிக்கும்.இவராக எந்த மாணவரிடத்திலும் காசு கேட்டது இல்லை.அவர்களாக பிரயப்பட்டு கொடுத்தால் சிரித்துக்கொண்டே வாங்கிகொள்வார்.இவருக்கும் , மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என்ன உறவு?காலம் மனிதர்களை எப்பொழுதும் பதுக்கிக் கொள்கிறது.அதன் மூலமாகத்தான் காலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.எங்கள் பள்ளியை சுற்றி உள்ள நான்கு கிராமங்களின் அப்பன்களுக்கும் ,தாத்தாக்களுக்கும் ,பேரன்களுக்கும் இவரை தெரியும்.இவர் பார்க்கவே காலமும், இந்த பள்ளியின் வடிவமும் மாறத்தொடங்கின. இப்பொழுது கிராமங்கள் முழு கிராமங்களாக இல்லை.நான் பள்ளி படிப்பு முடித்து விட்டு சென்னை வந்துவிட்டேன்.நான் படித்த வரை இருபாலர் பள்ளியாகவே இருந்தது.பிறகு சில வருடங்க்ள கழித்து ஆண்களுக்கு என்றும் , பெண்களுக்கென்றும் தனித்தனியாக பிரிந்தது.பாவம் இன்றைய மாணவர்கள்.அவர்களின் ஏக்கம் புரிகிறது.மாணவர் பருவத்தில் பெண்ணின் வாசமும் , தோழமையும் இல்லாமல் இருப்பது கணிதத்தை விட கொடுமையானதொரு உணர்வு.இருந்தாலும் காலத்திற்கு ஏற்றவாறு காதலும் , காதலை சொல்லும் விதமும் மாறிவிட்டது.நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியேறிய சில காலங்களில் கருப்பன் தாத்தாவும் ஓய்வு பெற்றுவிட்டதாக நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.இவர் பார்க்காத காதல் புறாக்கள் இல்லை,இவர் பார்க்காத ஆசிரியர் காதல்களும் இல்லை.ஆனால் ஒருபோதும் அவர் அதை வெளியில் சொன்னது இல்லை.காரணம், அவர்கள் அல்ல,நான் படித்த பள்ளி.இந்த பள்ளியில்தான் தன்னுடைய 40 வருடத்தை கடத்தியிருக்கிறார்.எத்தனை மாணவர்கள்,எத்தனை ஆசிரியர்கள்,எத்தனை முகங்கள் ,எத்தனை காலமாற்றங்கள்.,இப்படி ஆயிரமாயிரம் நினைவுகளை இந்த பள்ளியைப் போல இவரும் சுமந்துகொண்டேதான் இருக்கிறார்.கடந்தவாரம் நண்பனின் தங்கை திருமணத்திற்காக
ஊருக்கு சென்றிருந்தேன்.அப்பொழுது தற்செயலாக கருப்பன் தாத்தாவை எதிரில் பார்த்தேன்.படித்த காலத்தில் பார்த்த அதே தேகம் ,அதே சிரிப்பு ,அதே நடை,அதே காக்கி சட்டை.பார்த்த அடுத்த நொடி என்னுடைய பள்ளியின் அத்தனை நினைவுகளும் ஒரு நிமிடம் மின்னல் போல் வந்து போனது.சந்தியா டீச்சர், பச்சமுத்து இயற்பியல் ஆசிரியர்,மோகன் வாத்தியார்,பொன்னன் தமிழ் அய்யா,அறிவுராணி டீச்சர் ,சாந்தி டீச்சர்,என்னுடைய முதல் காதல் உட்பட அத்தனை நினைவுகளும் வந்தன.சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று நான் ஒரு ஒளிப்பதிவாளனாக இருப்பதை எண்ணி அந்த ஒரு நிமிடம் சந்தோசம் கொண்டேன்.
கையில் இருந்த ஐம்பது ரூபாயை அவருக்கு கொடுத்தேன்.சிறிது நேரம் பேசிக்கொண்டே இருந்த போது ,தனக்கு வரவேண்டிய ஓய்வுதிய பணம் இப்பொழுது வருவதில்லை என்று சொன்னார்.ஏன் என்று கேட்டேன்..?யாரோ நான் இறந்து விட்டதாக சொல்லி தனக்கு வரவேண்டிய பணத்தை நிறுத்தி விட்டதாகவும் , இப்பொழுது அதற்காகத்தான் அலைந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.இதை கேட்ட அடுத்த நொடி மனம் கனத்து போனது.இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் எத்தனை முறைதான் நாம் இழந்துகொண்டே இருப்பது.
மனிதர்களை அரித்துக்கொண்டே இருக்கும் கரையான்களை என்ன செய்வது.என்ன சொல்லி கருப்பன் தாத்தாவை சமாதானம் செய்வேன்.ஆயிரமாயிரம் முகங்களை பார்த்த அவரின் முகத்தை பார்க்க முடியவில்லை என்னால்.இது போன்ற கருப்பன் தாத்தாக்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு.அவர்களுக்கு எல்லாம் என்ன நடக்கிறது.இன்னும் எத்தனை கருப்பன் தாத்தாகளை இந்த சமூகம் சாகடிக்கப் போகிறது.கனத்த மனதோடு சென்னை வந்து சேர்ந்தேன்.இன்னும் பாரம் குறையவில்லை.குறையவும் போவதில்லை.நாளையின் மீதொரு நம்பிக்கை வைக்க ஏதேனும் நிகழ்ந்தால் நன்று.
வாழ்க பாரதம்..!!

