Thursday, November 15, 2012

நடமாடும் கதைகள்..!!


நகர்ந்தபடி நனைந்து கொண்டிருந்தன  
தேங்கிய மழை நீரில் விழுந்த பிம்பங்கள்,
ஒன்று குடையோடும் ,
ஒன்று குழந்தையோடும் ,
ஒன்று தள்ளாடியும் ,
மற்றொன்று நரை கூடியும் ,
இப்படி நீரில் விழும் பிம்பங்கள் ஏராளம்.
ஆனால் நீரே பிம்பமாவது எப்போது.
எத்தனை பிம்பங்கள் விழுந்த பின்னும்
இன்னும் நனையாமல்தான் இருக்கிறது நீர்.
பூக்காரி விட்டுச்சென்ற பூவினை
யாருக்காகவோ கவ்விச் செல்கிறது
பட்டினி நாய்.
கூச்சம் கொண்டு சிரிக்கும் பெண்ணை
கூர்ந்து கவனிக்கிறார் பேருந்து நடத்துனர்.
தனக்கு வயதாகிவிட்டதை எண்ணி
இரண்டாக கிழித்து தருகிறார்
பயணச்சீட்டோடு தன் கோபத்தையும்.
இரண்டு முழப் பூவினை
நான்கு முழமாக கட்டுகிறாள் பூக்காரி.
பூக்காரி கட்டுவதை பூதக் கண்ணாடி
கொண்டு பார்க்கிறாள் மடிசார் மாமி.
கடவுளை காலடியில் வரைந்து காட்டுகிறான் ஒருவன்,
கன்னத்தில் போட்டபடி காலணா வீசிச் செல்கிறான் மற்றொருவன்.
சாலையோர தேவதையை
பேரம் பேசி கூட்டிச்செல்கிறான் ஒருவன்.
அதற்க்கும் வழியில்லாதவன்
பொதுக்கழிப்பறை  நோக்கி செல்கிறான்.
ஏதோ ஒன்றை எழுதி கொண்டிருக்கிறான்
உலகின் பிம்பமே தன்மீது விழுந்த தேசாந்திரி.
அரை கோப்பை தேநீர் முடிவதற்குள்
6 சிகரெட் புகைகிறான் ஆறுமுகம்.
ஏழாம் அறிவை பற்றி எட்டு நாட்களாக
பேசிகொண்டிருகிறான் உதவி இயக்குநர்.
ஓசோவையும் , கூடங்குளதையும்
ஒருசேர பேசுகிறார் ஒருவர்.
யாருக்கும் அக்கறை இல்லை – எல்லாம்
POLITICS  என்று சொல்கிறார் மற்றொருவர்.
ஒபாமாதான் என்று அடித்து சொல்கிறார் ஒருவர்.
சிக்குன்குனியாவில் ஒருவன்.
சிக்கன் பிரியாணியில் மற்றொருவன்.
இப்படி நீண்டுகொண்டே இருக்கும்
கதைகளை எழுதிக்கொண்டேதான்
இருக்கிறது காலம்.
கதைகள் முடியாமல்
காலமே கதையாகிறது.

Sunday, November 4, 2012

நெஞ்சுக்குள்ள


நேத்து வர அடிச்ச காத்து
வேற தெச வீசுதுங்க..!!

மொளைக்காத பூவ தேடி
மூனு நாளா அலையுதுங்க..!!

கருவாச்சி நீ இல்லாம
கறிச்சோறு கசுகுதடி..!!

கடிகார முள்ள போல
மனசு இப்ப சுத்துதடி..!!

பதிச்ச முத்தம் காயும் முன்னே
பாவி மவ போயிட்ட..!!

பழைய சோறு நெனபுலதான்
அரளி வெத கலந்துட்ட..!!

தேங்கி கடந்த நெனபுலதான்
தேகம் சுத்தி வந்துச்சி..!!

கருப்பு தங்கம் போன பின்னே
நோவுலதான் வெந்துச்சி..!!

அந்தி சாயும் வேளையில
ஆகயந்தான் செவக்குது..!!

அன்னக் கிளி நீ இல்லாம
அண்டம் இப்ப கசக்குது..!!

பாடை கட்டி போகும்போது
பாவி நீயும் பாத்துக்க..!!

பதிச்ச முத்தம் காயலடி
பதுங்கி நின்னு அழுதுக்க..!!









Friday, October 26, 2012

ஸ்ரேயா கோஷல்..!!!!!


இவள் ராகம் கலந்த
பூவின் இதழ்..!!

ஸ்வரங்கள் சேர்ந்த
மழையின் துளி..!!

இவள் மூங்கில்மேல்
அமரும் பனித்துளி..!!

தாகம் தீர்க்கும்
இசையின் மழை..!!

இவள் குருவிகள் குளிக்கும்  
வானவில் அருவி..!!

பூக்கள் சூடிய
கூந்தல் அருவி..!!

இவள் வங்காள மண்ணின்
கீதம்..!!

இவள் தேன்குரல்
கூறும் மீதம்..!!

சுடிதார் அணிந்த
குயில் இவள்..!!

தென்றல் சுமக்கும்
குழந்தை இவள்..!!

தேநீர் அருந்தும்  
தேவதை இவள்..!!

 காற்றை இசைக்கும்
சிறகு இவள்..!!

 அடர்ந்த வனத்தில் – ஓர்
இலை இவள்..!!

ஆளில்லா சாலையின்
அமைதி இவள்..!!

மழைக்கால மயிலின்
தோகை இவள்..!!

இவள் பாட
பனித்துளி சிலிர்க்கும்..!!

பூ பேசும்
வார்த்தையெல்லாம்
ஸ்ரேயா பேச கண்டேன்..!!

ஸ்ரேயா பாடிய பாட்டிலெல்லாம்
தேகம் சிலிர்க்க நின்றேன்..!!

உனக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்குமடி  
ஒரு முறை கேட்ட நொடி உன்னையும் பிடித்ததடி..!!

பூவை ரசிப்பது ஓர் இன்பம்
பூ பாட ரசிப்பது பேரின்பம்..!!

ஒரு முறை உனை கண்டு
என் பெயர் சொல்லச் சொல்வேன்..!!

பிறவிப் பயன் போதுமென்றே
கல்லறை நோக்கி நான் செல்வேன்..!!

ஸ்ரேயா ஓ ஸ்ரேயா.....

Thursday, October 25, 2012

ஆதாம் : ஆப்பிள் : ஏவாள்


உன் கூந்தல் இலையால் பெண்ணே
உந்தன் பூவை கொஞ்சம் மறைக்காதே..!!

தேகம் பருகும் வேளையில்
நீயும் தேநீர் பருக அலையாதே..!!

களவு செய்யாமல் இருளுக்கு
அர்த்தம் இல்லையடி..!!

காதல் இல்லாமல் கண்ணே
கடவுளும் இங்கே தொல்லையடி..!!

பூவின் நிழலில்
தேன் இல்லையடி..!!

நீ ஒளிந்து கொண்டால்
காதல் இல்லையடி..!!

நம் கண்கள் கொண்டே
விடிந்து விடுவோம்..!!

சூரியன் விழிப்பதை
தடுத்து விடுவோம்..!!

குறைந்த ஒளியில்
தேடல் செய்வோம்.!!

கூடிய வரையில்
காதல் வளர்ப்போம்..!!

ஆப்பிள் கடித்த ரகசியத்தை
அந்த ஆதாம் மட்டும்தான்
அறிவானா..!!?

இந்த ஆதாம் அறிந்திட
நினைக்கும் போது
ஏவாள் நீயும்
தடுப்பாயோ..!!?

இது ஆப்பிள்
உலகம் பெண்ணே
பல JOBS கள் இருக்குது
முன்னே..!!

APPLE  PRODUCTS
APPS..ம் நீ..!!

அந்த APES கள்
தொடங்கிய காதலும் நீ..!!

கண்ணே வா வா - இது
பொற்காலம்..!!

மீண்டும் செல்வோம்
அந்த கற்க்காலம்

கண்கள் தீட்டி
தீ வளர்ப்போம்..!!

நம் காதல் கூட்டினில்
சிசு வளர்ப்போம்..!!

வா வா பெண்ணே முன்னாடி
உன் தேகம் எனது கண்ணாடி..!!

நீ connecting செய்யும் NOKIA
உன்னால் என்னுள் PHOBIA..!!

உன் கூந்தல் இலையால் பெண்ணே
உந்தன் பூவை கொஞ்சம் மறைக்காதே..!!























Monday, October 22, 2012

கையளவு நெஞ்சத்தில..!!!


ஆட்டுக்கல்லு தண்ணியில
அழுக்கான நிலா..!!

நெல்லு குத்தும் ஆளுக
நேத்து மொத காணல..!!

நிலா சோறு சாப்பிட கொழந்த
இன்னும் பொறக்கல..!!

வானம் பாத்து கெடக்குறான்
போதகார மாரி..!!

மும்மாரி பொழிஞ்ச பின்னும்
எழல இந்த மாரி..!!

நேத்து வச்ச மீன் கொழம்பு
ஊரு எல்ல தாண்டுது..!!

கோவிச்சிக்கிட்டு போன தாரம்
கொழந்தையோட திரும்புது..!!

கோவணத்த அலசுறாரு
கோணக் காலு கோவிந்தன்..!!

கோக்கு மாக்கு பண்ணுறாரு
ரெண்டு தாரம் கோவாலு..!!

சமஞ்ச பொண்ணு செவப்பா
செவந்து கெடக்குது வானம்..!!

ஊரு பெருசு மீச முறுக்கி
உம்முனுதான் பாக்குது..!!

கொஞ்சம் பொழுது சாயும் வேளையில
வேட்டி சரிய ஆடுது..!!

ஆட்டம் முடிஞ்சி படுக்கையில
ஆந்த சத்தம் போடுது..!!

அழுக்கான நிலா இப்ப
ஆகாசத்துக்கு போகுது..!!

விடிய விடிய ஆட்டம் போட்டும்
மீதம் கொஞ்சம் இருக்குது..!!

அடுத்த நாளு தொடர சொல்லி
நாயும் மூஞ்ச திருபுது..!!

நெல்லும் குத்தும் சத்தத்துல
நெனவு கொஞ்சம் திரும்புது..!!

திரும்பி வந்த சம்சாரம்
என் மடியில கெடக்குது..!!

வேலைக்கு கெளம்பும் போது  
சோறு வாட தூக்குது..!!

சிறுவாட்டு காசு இப்ப
கோழியா தொங்குது..!!

எப்புடித்தான் வாழ்ந்தாலும்
எட்டு காலு வாகனம் – அந்த
எட்டு காலு வாகனத்துல
எல்லாருமே போகணும்..!!

X கவிதை


நீ தீண்டாத என் உடல் – இன்னும்
பிறக்கவில்லை..!!

நீயில்லா இரவு – இன்னும்
விடியவில்லை..!!

காற்றின் கருவறையில் தங்கிக்கொண்டது
நீ பேசிய மௌனங்கள்..!!

கனத்த மனதின் காற்று
கர்ப்பிணி போல நடக்கிறது..!!

வானின் பிம்பம் விழுந்து
கடல் வானமானது..!!

நிலா ஒருபோதும்
நீரில் நனைவதில்லை..!!

நனையாத நிலவை
படகும் சுமப்பதில்லை..!!

நேற்றிரவின் மழை ஏதோ ஒன்றை
தூவியது..!!

மழை நின்றபின்
வானமே விழுந்தது..!!


காரணமின்றி அழுகிறது
பேசப்படாத வார்த்தைகள்..!!

காரணத்தோடே அழுகிறது
உனக்கான முத்தங்கள்..!!

ஞாபகச் சேற்றில்
விதைந்துக் கிடக்கிறோம்..!!

நாளையின் மீதொரு நம்பிக்கை வைக்க
நாளையின் முடிவில் வருவாயா !?

Wednesday, September 5, 2012

நீயின்றி அமையாது என் இரவு !!!


வெளிச்சமற்ற இரவில்
விடிந்துகொண்டிருந்தது நம் உடல்கள் 

ஒருபோதும் உதிராத உன் விழிப்பூவை
சூடிக்கொண்டது என் உடல் !

உதிர்ந்த உன் கூந்தலை
சூடிக்கொண்டது நம் அறை !

வீடெங்கும் உன் வாசம் !
அறையெங்கும் உன் தாகம் !

ஒருபோதும் உறங்காத ஆந்தை
கண்மூடி காதை பொத்திக்கொண்டது !

பூபெய்திய உன் முத்தத்தால்
நீராடுது பருவம் !

மனதின் இடுக்கில் இசையாய்
நுழைகிறது உன் காற்று !

நாம் காதல் உமிழ்ந்த எச்சம் !
காதல் கூறும் மிச்சம் !

நீயில்லா இரவை
நிலவும் ரசிபதில்லை
நானும் அப்படிதான் !

தனிமை துயரின்
தாழ் நீக்கினாய் அன்று ,
இன்று  என்னையும் !

தனிமை தெருவில் தகர்ந்து நிற்கிறது
தாழிடப்பட்ட நம் மனதின் வீடு !

நீயில்லா என் இரவை
இனி யார் ஆள்வது !

நீரின்றி அமைய சாத்தியம்
நீயின்றி சாத்தியமோ என் உலகு.....!!!

Wednesday, August 1, 2012


நினைவு புறாக்கள் உள்வானில் பறந்தன !
யாருமில்லாத இரவை ஆள்கிறது நிலவு !
நேரம் தவறாமல் கடிகாரம் ஓடுகிறது !
கடிகாரம் நின்றாலும் நேரம் ஓடத்தான் செய்கிறது !
நேரம் பார்க்காமல் நாமும் ஓடுகிறோம் !
தூக்கம் இல்லாத கடலை பார்க்கிறது
யாரோ விட்டுச்சென்ற நாய்க்குட்டி !
தூக்கம் இல்லாமல் தவிக்கின்றான்
பெண்ணையும் பொன்னையும் பெற்றவன் !
மார்கழி சாலையை மூடிக்கொள்கிறது பேரமைதி !
டீ கடை சப்தத்தால் விழித்துக்கொண்டது சேவல் !
சேவல் கூவாமல் விழித்துக்கொண்டது அடிவானம் !
அடிவான சிவப்பில் சோம்பல் முறிக்கின்றது
நேற்றிரவை  ரசிக்காத காகம் !
காகத்தின் சப்தத்தால் கோபம் கொள்கிறான் தேசாந்திரி !
தேசாந்திரி பார்வையில் உலகம் விடியவே இல்லை !
உலகை அதன் குறைகளோடே ஏற்றுக்கொள்கிறான் !
உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாமும் குறைகளே !!









Sunday, June 17, 2012

புல்லின் நுனி 
ஓர் பனி 
வானத்து பிம்பம் 
அதை பார்க்கும் நீ !
உனை பார்க்கும் நான் !
நமை பார்க்கும் காதல் !

Wednesday, June 6, 2012

வினா வெளியில் ஓர் இரவு !


காதலோடும் காதலியோடும் 
வருகிறேன் கடலே !

நின் சப்த சிணுங்களில் 
சிணுங்கினாள் என் சிநேகிதி !

என் காதலி தீண்டலில் 
நீ சப்தமற்று போனாய் 
என் செவிகளில் !

புருவம் உயர்த்தி 
நிலவை காட்டினாள் !

அவள் கால்விரல் பிடித்து 
கூச்சம் கூட்டினேன் !

கன்னம் கிள்ளி 
காதல் பேசினாள் !

அவள் கன்னம் முழுதும்
காதல் பதித்தேன் !

நீண்ட இரவொன்று அவள் 
கண்களில் தெரிந்தது !

அவள் கண்கள் கொண்டே 
என் உடலும் விடிந்தது !

இப்படி நிகழ்ந்து கொண்டே இருக்குது 
மர்மமும் மாயையும் 
இடைவெளி இல்லா அலை போல !

ஒரு போதும் 
தீர்ந்து போவதில்லை 
கடலும் காதலும் ........

அடர்ந்த வனத்தில் ஓர் இலை ....


எதிர்ப்படும் காட்சிகளை
ஒரு போதும் 
தவிர்க்க முடிவதில்லை .

அது 
பெண்ணோ !
பிச்சைகாரனோ !
பேரறிவோ !
ஓர் பிழையோ !
நாய்க்குட்டியோ - இல்லை 
நகைக்கும் குட்டியோ !
பூக்காரியோ !
நாகரிகமோ !
அநாகரிகமோ!
cafe-day ஓ 
டீ கடை நாயரோ !
BMW ஓ 
AUDI ஓ 
பஞ்சர் கடையோ !
பால் பார்வையோ !
அரை நிர்வாண ஞானியோ !
முழு சட்டை முட்டாளோ !
கருப்பு சட்டை கூட்டமோ - இல்லை 
காவி சட்டையின் காமமோ !

இப்படி நீண்டு கொண்டே போகுது 
கனவுகளும் காட்சிகளும் ......

காட்சிகள் கண்ட களைப்பில் 
ஞானப் பெருமூச்சி விடுகிறேன்
 என் இருப்பை எண்ணி 
ஒரு கோப்பை தேநீருடன் !!!!

Monday, February 13, 2012

யாதும் காதலே !!!!

முட்டாள்தனத்தின்
ரகசிய பெட்டகமே!

அவிழ்க்க இயலாத
பாலினத்தின் முடிச்சுகளே!

தனிமை துயரின்
தாழ் நீக்கிய மாயையே!

சௌகர்யத்தின்
சகலமே!

ஆதாம் முதல்
அம்மாவாசை வரை
கடித்த ஆப்பிளே!

மீண்டுமொருமுறை
கிடைத்தால் கொடுத்துவிடு
ஏவாளிடம்..

பாவம் !

எத்தனை முறை
ஆதாம் மட்டுமே
கவிதை எழுதுவது.

யாதும் காதலே !!!!

தூக்கமற்ற நேற்றிரவில் ...

பூ போட்ட தாவணி வாசத்தால்
மூழ்கியிருந்தது அவ்வகுப்பறை.

பருவப்பயிர்களை உடல்மொழியால்
மேய்ந்துகொண்டிருந்தன தாவணி ஆடுகள்.

முதல் முத்தத்தால்
அறிந்து கொண்ட மௌனம்.

தீண்டப்பட்ட விரல்களில்
மறைந்திருந்த மர்மங்கள்.

பார்வையற்ற பறவைகளாய்
அந்தரங்க வானில் பறந்துகொண்டிருந்த
பால்யத்தின் பிழைகள்.

பிழைகளை திருந்தச் செய்ய
நீண்டுகொண்டிருந்த தனிமையின் காலம்.

கூடி முயங்கவும் இல்லை,
ஊடலும் இல்லை.

தனிமையின் தாழ் நீக்கிய
பருவத்தின் வாசம்.

ஏதோ ஒன்றை வீசிவிட்டு போன
பால் பார்வையின் ஸ்பரிசம்.

இன்றுவரை கிடைக்காத
பருவத்திற்கான விடைகள்.

உடல் தீண்டவே விருப்பமிருந்தும்
உன்னதமென்று பெயர்ச் சூட்டிக்கொண்டோம்.

போதை மழையில் ஆயிரம்
சுக வேளைகள்.

மீண்டுமொருமுறை கிடைக்குமோ
பிழைகளை சரிசெய்வதற்கான
தனிமையும் பருவமும்.

Tuesday, January 10, 2012

கனவுகளில் கடந்ததேசம்...

மறுமலர்ச்சி மின்மினியே..
பூப்பெய்திய பனித்துளியே..

உன்னில் விழுந்த பூவின் பிம்பம்
வானத்தை வரைந்து காட்டும்.

மிதந்து போகும் மேகமெல்லாம்
நின் தேகம் சிலிர்த்த மிச்சம்.

நீரில் விழுந்த நிலவின் படகில்
நீ என்றோ தந்த முத்தத்தின் மௌனம்.

உன் கண்கள் கொண்டே விடிந்தது
என் உடலும் உலகமும்.

உன் புருவம் அசைந்த கண்மேட்டில்
நின்றபடி நீந்திச்செல்லும்
மண்மீனின் மாயம்.

மீண்டும் மீண்டும் உயிர் தொட்டே
புலர்கிறது - என்
கனவுகளின் பொழுதுகள்.