Saturday, December 25, 2010

உண்டு உண்டு


அச்சமும் உண்டு ; விருப்பமும் உண்டு  ;
நிறுதற்குறியினுள் அடங்க மறுக்கும் வாசகமாய் !?
முடிவற்ற - எழுத்தாளனாய் இருப்பதில் ...
சமகால சமூகம் சுடுகாடாகும் ,
எதிர்படும் முகங்களை ஏளனமாக்கும் ,
புன்னகையை உரித்துப்பார்க்க தோன்றும் ,
ஈன்றோர்  எதிரிஎனப்படுவர் ,
உடன்பிறந்தோர்  இழிவெனப்படுவர்,
அவர்தம் சோற்றுக்காக யாரோ உழைப்பர்,
பிறர்நோக  தினமும் குடிப்பர்,
அடுத்தவரை தூற்ற ஆயிரம்  சொற்கள் ,
தம்  பெயருக்கோ சில எழுத்துக்கள் ,
சங்கம் முதல் சமகாலம் வரை ஞானம் ,
அதீத ஞானமென  பிறர் வாட பேசும் ,
ஒரு படி  அரிசி விலை தெரியாமல் போகலாம் ,
கம்பனை கடவுள் என்று போற்றலாம் ,
தான்  கடவுள் என்றும் தோன்றலாம் ,
இவர்தம் நேர்வழி சாலை வளைந்தும் போகலாம் ,
வளைந்த பாதையை நேரென்றும் வாதிடலாம் ,
வீதியை வீடென  சொல்வர் ,
யாருக்கோ வாழ்வதாய் என
எவருக்கும் வாழார் ,
எதிர்காலமென எதையும்  எழுதுவர்  ,
வாழும் நொடி வாழார் ;
வீழ்ந்த பின்பு  வாழ்வார்  சிலசமயங்களில்  ,
சுடர் அணையும் வேளையில்
சுய சரிதம்  படைப்பர் ,
இதை போற்றி யாவரும் மெச்சுவர்,
அவர்தம் பிணத்திற்கு   அவரே வெட்டியான்
அவர்தம்  கல்லறைக்கு அவரே வாசகம் ,
தோற்றம் மறைவென வரலாறு அச்சிடும் ,
கருத்தரங்கம் வைத்து இவர்தம் புகழ் பாடும் ..
சமூக சோற்றினில் சிறந்த பருக்கை ஆவார் .
அடுத்த களத்தினில் மெச்சும் விதை ஆவார்.
இருபினும்
தீதும் நன்றும் பிறர் தர வருமோ ?
இனி முடிவிலா...
அச்சமும் உண்டு ; விருப்பமும் உண்டு  ;

No comments:

Post a Comment